கோலாலம்பூர், நவம்பர்.14-
போலீஸ் துறையிலிருந்து பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள இன்ஸ்பெக்டர் ஷீலா என்ற ஷீலா ஷெரோன் ஸ்டீவன் குமார், மூன்று போலீஸ் புகார்களை அளித்துள்ளார் என்று கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ ஃபாடில் மார்சுஸ் தெரிவித்தார்.
டாங் வாங்கி போலீஸ் நிலையம் அருகில் உள்ள உணவகக் கடைக்காரர் ஒருவருடன் நடந்த சர்ச்சையும் இந்த மூன்று போலீஸ் புகார்களில் அடங்கும் என்று அவர் குறிப்பிட்டார்.
நேற்று நவம்பர் 13 ஆம் தேதி உணவகக் கடைக்காரரிடம் செல்லத்தக்க லைசென்ஸ் உள்ளதா? என்று கேள்வி எழுப்பியதுடன், அங்கிருந்த வாடிக்கையாளர்களை நோக்கி ஷீலா சத்தம் போட்டதாகக் கூறப்படுகிறது.
அந்த உணவகக் கடைக்காரர், லஞ்சமாக அதிகாரிகளுக்கு இலவச உணவு வழங்குவதாக ஷீலா குற்றஞ்சாட்டிய போது இருவருக்கும் இடையில் சர்ச்சை எழுந்ததாகக் கூறப்படுகிறது.
மேலும் அரசாங்கப் பணியாளரின் பணிக்கு தாம் இடையூறு விளைவித்ததாகக் கூறி, தாம் கைது செய்யப்பட்ட முறை தொடர்பில் ஷீலா இரண்டாவது போலீஸ் புகாரை அளித்துள்ளார்.
மூன்றாவது புகாரானது, ஒரு மூத்த போலீஸ்காரர் என்ற முறையில் தம்மைச் சாதாரண போலீஸ்காரர்கள் மதிக்கவில்லை என்று ஷீலா புகார் அளித்துள்ளதாக ஃபாடில் மார்சுஸ் தெரிவித்தார்.
எனினும் மூன்றாவது புகாருக்கு எதிராக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படாது. இந்த விவகாரம் போலீஸ் துறையின் நேர்மை மற்றும் நன்னெறிப் பிரிவிடம் ஒப்படைக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.








