கோலாலம்பூர், ஆகஸ்ட்.03-
கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் புறப்பாட்டு முனையத்தில் நேற்று மாலை ஒரு பெரும் மோசடி அம்பலமானது. சந்தேகத்திற்கிடமான பாதுகாப்பு முத்திரைகளைக் கொண்ட கடப்பிதழுடன் 33 வயது இந்தோனேசியர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
2022 முதல் மலேசியாவை விட்டு வெளியேறாத போதும், அவரது கடப்பிதழில் 2022 முதல் 2025 வரை மலேசியாவுக்கு உள்ளே நுழைந்ததாகவும் மலேசியாவை விட்டு வெளியேறியதாகவும் பல முத்திரைகள் இருப்பதைக் கண்டறிந்த மலேசிய எல்லைக் கட்டுப்பாடு, பாதுகாப்பு அதிகாரிகள் அதிர்ந்தனர். இந்த 'பறக்கும் பாஸ்போர்ட்' மோசடிக்கு 4 ஆயிரம் ரிங்கிட் கையூட்டு கொடுக்கப்பட்டதாக அந்த நபர் ஒப்புக் கொண்ட நிலையில், இதன் பின்னணியில் உள்ள சூத்திரதாரிகளை ஏகேபிஎஸ் தீவிரமாகத் தேடி வருகிறது.








