கோலாலம்பூர், நவம்பர்.18-
அரசாங்கத் தொலைக்காட்சியான ஆர்டிஎம்மின், டிவி2 அலைவரிசையில் நேற்று ஒளிபரப்பப்பட்ட Santiago of the Seas என்ற அனிமேஷன் தொடருக்கு எதிராக மக்களிடமிருந்து புகார்கள் வந்ததையடுத்து, அத்தொடர் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
அத்தொடரின் 22-வது அத்தியாயத்தில், ஓரினச் சேர்க்கையைக் குறிப்பது போலான காட்சிகள் இடம் பெற்றதாக சமூக ஊடகங்களில் சிலர் கருத்துத் தெரிவித்திருந்தனர்.
இதனை உடனடியாகக் கவனத்தில் எடுத்த ஆர்டிஎம் ஒளிபரப்புச் சேவைப் பிரிவு, சம்பந்தப்பட்ட அத்தியாயத்தின் உள்ளடக்கத்தை மதிப்பாய்வு செய்தது.
அந்த ஆய்வில் ஓரினச் சேர்க்கையைக் குறிப்பது போலான உள்ளடக்கங்கள் எதுவும் பதிவாகவில்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.
என்றாலும், மக்களிடையே எழுந்துள்ள சந்தேகத்தின் காரணமாக, அத்தொடரை விரிவான ஆய்வுக்கு உட்படுத்த, அதனைத் தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாக ஆர்டிஎம் நிர்வாகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.








