கோலாலம்பூர், ஆகஸ்ட்.28-
மலேசிய கூட்டரசு அரசாங்கத்தின் கடன் இவ்வாண்டு ஜுன் மாதம் நிலவரப்படி 1.304 டிரில்லியனை எட்டியுள்ளது. இது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 63.9 விழுக்காடாகும் என்று இரண்டாவது நிதி அமைச்சர் டத்தோ ஶ்ரீ அமீர் ஹம்ஸா அஸிஸான் தெரிவித்துள்ளார்.
2024 ஆம் ஆண்டு இறுதியில் பதிவுச் செய்யப்பட்ட 1.248 டிரில்லியன் அல்லது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 64.6 விழுக்காட்டு உயர்வை இது குறிக்கிறது என்று நாடாளுமன்ற மேலவையில் பதில் அளிக்கையில் அமீர் ஹம்ஸா இதனைக் குறிப்பிட்டார்.
தேசிய வளர்ச்சி செலவினங்களை ஆதரிப்பதற்கான தொடர்ச்சியான பற்றாக்குறையே இந்தக் கடன் அதிகரிப்புக்கு முக்கியக் காரணமாகும் என்று அமைச்சர் விளக்கம் அளித்தார்.
இத்தகையக் கடன் இருந்த போதிலும் மடானி அரசாங்கத்தின் கீழ் நிதி ஒருங்கிணைப்பு முயற்சிகள் தொடர்ந்து பலன் அளிக்கத் தொடங்கியிருப்பதாக அமீர் ஹம்ஸா தெளிவுபடுத்தினார்.








