சிரம்பான், ஜனவரி.02-
நெகிரி செம்பிலான் மாநிலத்தில் சுமார் 30 ஆயிரம் நில உரிமையாளர்கள் கடந்த 10 ஆண்டுகளாக 5 மில்லியன் ரிங்கிட் நில வரி நிலுவை வைத்துள்ளதாகவும், இதில் சிரம்பான் மாவட்டம் முதலிடத்தில் இருப்பதாகவும் நெகிரி செம்பிலான் நிலம், சுரங்கத் துறை இயக்குநர் முஹமட் ஃபைஸால் அப்துல் மனாப் அதிரடியாக அறிவித்துள்ளார். நிலுவைத் தொகை 1 மில்லியன் ரிங்கிட்டைத் தாண்டிய உரிமையாளர்களும் பட்டியலில் உள்ளனர். 5 ஆண்டுகளுக்கு மேல் வரி கட்டத் தவறுபவர்களின் நிலங்கள் சட்டப்படி பறிமுதல் செய்யப்பட்டு அரசுடைமையாக்கப்படும் என அவர் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சொத்து உரிமையாளர்கள் திவாலானது அல்லது காலமானது போன்ற காரணங்களால் நிலுவை அதிகரித்துள்ள வேளையில், எதிர்வரும் மே 31-ஆம் தேதிக்குள் நிலுவைத் தொகையைத் தவணை முறையிலோ அல்லது மேல்முறையீடு செய்தோ செலுத்தி நடவடிக்கையிலிருந்து தப்பிக்க காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் வரி செலுத்தாதவர்களுக்கு 496 நிலப் பறிமுதல் நோட்டீஸ்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில், தற்போதைய நில வரி வசூல் இலக்கான 132.45 மில்லியன் ரிங்கிட்டைத் தாண்டி 100 விழுக்காடு வெற்றி பெற்றுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.








