பட்டர்வொர்த், பிப்ரவரி.23-
எதிர்வரும் ஜூலை மாதம் நடைபெறவுள்ள ஜசெக கட்சியின் சிறப்பு மாநாட்டிற்கு முன்னதாக, அக்கட்சியின் அடிமட்ட உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் உட்பட பினாங்கு மக்கள் தங்கள் கருத்துக்கள் மற்றும் விமர்சனங்களைத் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
வரும் ஜூலை 12 ஆம் தேதி நடைபெறும் இம்மாநாட்டின் போது, சேகரிக்கப்பட்ட விமர்சனங்கள் மற்றும் கருத்துக்கள் அனைத்தும், பிரதிநிதிகளால் பரிசீலனை செய்யப்படும் என்று ஜசெக மத்திய செயற்குழு உறுப்பினரும், பினாங்கு முதலமைச்சருமான சாவ் கோன் இயாவ் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் ஒற்றுமை அரசாங்கத்திற்குத் தொடர்ந்து ஆதரவளிக்கும் அதே வேளையில், கட்சியின் தலைவர்கள் அனைத்து அரசாங்கப் பதவிகளில் இருந்தும் விலக வேண்டுமா? என்பது இந்த சிறப்பு மாநாட்டில் முடிவு செய்யப்படும் என்றும் சாவ் கோன் இயாவ் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பொதுமக்கள் தங்களது விமர்சனங்களை, ஜசெக உறுப்பினர்கள் மூலமாகவோ, சமூக ஊடகங்களின் மூலமாகவோ அல்லது ஜசெக கட்சிக்கு மின்னஞ்சல் மற்றும் கடிதங்கள் மூலமாகவோ தெரிவிக்கலாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.








