Dec 4, 2025
Thisaigal NewsYouTube
இந்தியப் பிரச்சினைகள் அமைச்சரவை அளவில் தீர்க்கப்படவில்லையா?
தற்போதைய செய்திகள்

இந்தியப் பிரச்சினைகள் அமைச்சரவை அளவில் தீர்க்கப்படவில்லையா?

Share:

கோலாலம்பூர், ஜூலை.28-

இந்தியச் சமூகம் தொடர்பான பல விஷயங்கள் அமைச்சரவை அளவில் தீர்க்கப்படவில்லை என்ற தவறான கருத்தைச் சில தரப்பினர் பரப்பி வருகின்றனர். இது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானதாகும் என்று தேசிய ஒற்றுமைத்துறைத் துணை அமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட தரப்பினரின் குற்றச்சாட்டு, இந்திய சமூகம் உட்பட அனைத்து மலேசியர்களின் நல்வாழ்வு மற்றும் முன்னேற்றத்திற்கான அரசாங்கத்தின் தொடர்ச்சியான உறுதிப்பாட்டை பிரதிபலிக்கவில்லை என்று அவர் வாதிட்டார்.

மஇகாவின் ஏம்ஸ்ட் பல்கலைக்கழகம் மற்றும் டேஃப் கல்லூரிக்குக் கூடுதல் நிதி ஒதுக்கீடுகளையும், மஇகாவின் கல்விக் கரமான எம்ஐஇடிக்கு உதவித் தொகைகளுக்கான நிதியையும் அமைச்சரவை கடந்த காலத்தில் அங்கீகரித்துள்ளது. இது இந்திய மாணவர்கள் உயர்கல்வியில் சிறந்த அடைவு நிலை பெறுவதை உறுதிச் செய்கிறது என்று செனட்டர் சரஸ்வதி ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

பிரதமர் அன்வார் இப்ராஹிம் தலைமைத்துவத்தின் கீழ் உள்ள அரசாங்கம் இந்திய சமூகம் சம்பந்தப்பட்ட நீண்ட கால குடியுரிமை மற்றும் ஆவணச் சிக்கல்களைத் தீர்க்க பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்று சரஸ்வதி சுட்டிக் காட்டினார்.

கடந்த 2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் உள்துறை அமைச்சின் கீழ் ஒரு சிறப்புப் பணிக்குழு அமைக்கப்பட்டது. இது பிறப்பு குறித்து காலத் தாமதமாகச் செய்தல் மற்றும் மைகாட் வழங்குவதை எளிதாக்கியது. குறிப்பாக முழுமையான ஆவணங்கள் இல்லாத இந்தியப் பெற்றோருக்குப் பிறந்த குழந்தைகளுக்கு, சுதந்திரத்திற்கு முன்பே இந்த நாட்டில் பிறந்த அல்லது வாழ்ந்த இந்தியர்களிடையே நிலவும் நாடற்ற ஆவணப் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வருவதை அரசாங்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது என்று சரஸ்வதி விளக்கினார்.

தவிர இந்திய இளைஞர்களுக்கு உயர்தரமான, வேலைக்குத் தயார்படுத்தும் பயிற்சித் திட்டங்கள், அதிகத் தேவை உள்ள தொழில்களில் திறன் மேம்பாடு உட்பட திவேட் படிப்புகளைத் தொடரும் இந்தியர்களுக்கு உதவித் தொகைத் திட்டங்களையும் நிதி உதவியையும் விரிவுபடுத்தியுள்ளது. உயர் மட்டப் பயிற்சி பெறுவதற்காக 500 இந்திய இளைஞர்கள் சீனாவிற்கு அனுப்பியதாகவும் சரஸ்வதி தெளிவுபடுத்தினார்.

Related News