Feb 21, 2026
Thisaigal NewsYouTube
இளம் வீரர் இந்திரன் மரணம்: வதந்திகளைத் தவிர்க்குமாறு தற்காப்பு அமைச்சர்  வேண்டுகோள்
தற்போதைய செய்திகள்

இளம் வீரர் இந்திரன் மரணம்: வதந்திகளைத் தவிர்க்குமாறு தற்காப்பு அமைச்சர் வேண்டுகோள்

Share:

கோலாலம்பூர், பிப்ரவரி.21-

குவாந்தான் ராணுவ முகாமில் மயக்கமடைந்த நிலையில் மீட்கப்பட்டு உயிரிழந்த இளம் வீரர் கே. இந்திரனின் மரணத்தில், சித்ரவதை அல்லது துன்புறுத்தல்கள் நடந்ததற்கான எந்தவொரு தடயமும் கண்டறியப்படவில்லை என தற்காப்புத் துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ காலிட் நோர்டின் தெரிவித்துள்ளார்.

இன்று காலை மேற்கொள்ளப்பட்ட பிரேதப் பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் இதனை உறுதிப்படுத்திய அவர், இந்த விவகாரத்தை யாரும் அரசியலாக்க வேண்டாம் என்றும், முழுமையான விசாரணை முடியும் வரை பொறுமை காக்குமாறும் கேட்டுக் கொண்டார்.

தேவைப்பட்டால், இது குறித்து விசாரிக்கத் தனிக்குழு அமைக்கப்படும் என்றும் ஜோகூர், பாசீர் கூடாங் நாடாளுமன்றத் தொகுதியில் பள்ளி மாணவர்களுக்கு உதவி வழங்கும் நிகழ்விற்குப் பின் அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

அதே வேளையில், தனது மகனின் மரணம் குறித்துத் தவறான வதந்திகளைப் பரப்பி ராணுவத்தின் பெயருக்குக் களங்கம் விளைவிக்க வேண்டாம் என இந்திரனின் தாயாரான 52 வயது எஸ். உஷா உருக்கமாகக் கேட்டுக் கொண்டார்.

பினாங்கில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "எனது மகன் துன்புறுத்தப்பட்டதாக வந்த செய்திகள் என்னைப் பதற்றமடையச் செய்தன, ஆனால் பிரேதப் பரிசோதனையில் அவரது உடலில் எவ்வித காயங்களும் இல்லை என்பது உறுதியாகியுள்ளது. அவன் சித்ரவதை செய்யப்படவில்லை," என்று தெரிவித்தார். மரணத்திற்கான உண்மையான காரணத்தைக் கண்டறியும் உட்புறப் பரிசோதனைகள் இன்னும் 3 முதல் 4 மாதங்கள் வரை எடுக்கும் என்பதால், அதுவரை பொதுமக்கள் தன்னிச்சையாகக் கருத்துகள் கூறுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

Related News