கூச்சிங், நவம்பர்.01-
இளம் தலைமுறையினரின் பாதுகாப்பு மற்றும் மனநிலையில் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாக நம்பப்படும் Roblox என்ற இணைய விளையாட்டைத் தடை செய்ய அரசாங்கம் பரிசீலித்து வருகின்றது.
ஆஸ்திரேலியாவில் டிசம்பரில் அமலுக்கு வரும், புதிய Roblox ஒழுங்குமுறைகளை அடிப்படையாகக் கொண்டு, மலேசியாவில் இந்த விவகாரத்தில் தீர்வு காணப்படும் என்று மகளிர், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டுத்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ நான்சி ஷுக்ரி தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியா இந்த விவகாரத்தில் எவ்வாறு ஒழுங்குமுறைகளை அமல்படுத்துகிறது என்பதை அரசாங்கம் கவனித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ள அவர், இதுவரை எந்த ஒரு முடிவும் எடுக்கப்படவில்லை என்பதையும் சுட்டிக் காட்டியுள்ளார்.
என்றாலும், அது போன்ற அணுகுமுறை, நமது மலேசிய சூழல் மற்றும் கலாச்சார விதிமுறைகளுடன் ஒத்துப் போகிறதா என்பதை மதிப்பீடு செய்த பின்னரே, இந்த விவகாரத்தில் முடிவு எடுக்கப்படும் என்றும் நான்சி ஷுக்ரி குறிப்பிட்டுள்ளார்.








