கோலாலம்பூர், ஆகஸ்ட்.21-
சட்டத்துறை அமைச்சை மீண்டும் நிறுவுவது தொடர்பில் தாம் தீவிரமாகப் பரிசீலனை செய்து வருவதாக பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
1995 ஆம் ஆண்டு சட்டத்துறை அமைச்சு அகற்றப்படுவதற்கு முன்பு, சட்ட விவகாரங்களை சட்டத்துறை அமைச்சே கவனித்து வந்தது. அதன் பிறகு சட்ட விவகாரங்களைக் கவனிப்பதற்கு பிரதமர் துறையின் கீழ் சட்ட விவகாரங்களுக்கான ஒரு தனிப்பிரிவு உருவாக்கப்பட்டதாக டத்தோ ஶ்ரீ அன்வார் விளக்கினார்.
தற்போது சட்டத்துறை விவகாரங்களை பிரதமர் துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ அஸாலினா ஒத்மான் சையிட் கவனித்து வருகிறார். எனினும் சட்டத்துறை அமைச்சை மீண்டும் உருவாக்குவது மூலம் நாட்டின் சட்டத்துறை அமைப்பு, சிறந்த கட்டமைப்பைக் கொண்டிருக்கும் என்றும், பிராந்தியத்தில் மலேசியாவின் பங்கை வலுப்படுத்த முடியும் என்றும் அன்வார் கூறினார்.
இவ்விவகாரத்தில் அமைச்சர் அஸாலினா மிகவும் உற்சாகமாக இருக்கிறார். மேலும் விரைவில் மாற்றங்களைச் செய்ய எப்போதும் தம்மை வற்புறுத்தி வருகிறார். எனவே, சட்டத்துறை அமைச்சை நிறுவுவது குறித்து தாம் தீவிரமாகப் பரிசீலனை செய்து வருவதாக அன்வார் குறிப்பிட்டார்.








