பெட்டாலிங் ஜெயா, செப்டம்பர்.24-
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பெட்டாலிங் ஜெயாவில் தாம் தங்கியிருந்த ஆடம்பர அடுக்குமாடி வீட்டில் இறந்த கிடந்த ஒரு மருத்துவரான 35 வயது டாக்டர் சிந்துமதி முத்துசாமியின் மரணத்தில் புதைந்துள்ள மர்மங்களை விலக்குவதற்கு மரண விசாரணைக்குப் போலீசார் பரிந்துரை செய்துள்ளனர்.
டாக்டர் சிந்துமதியின் மரணத்திற்கானக் காரணத்தைக் கண்டறிவதற்கு மரண விசாரணை நடத்துவதற்கு போலீசார் பரிந்துரை செய்துள்ளதாக அந்தப் பெண் மருத்துவரின் குடும்பத்தின் வழக்கறிஞர் நிறுவனமான அப்துல் ஹாலிம் உஷா அண்ட் எஸ்ஸோசியேட்ஸ் தெரிவித்துள்ளது.
ஆகஸ்ட் 26 தேதியிடப்பட்ட கடிதத்தில் இவ்வழக்கு கடந்த மே 27 ஆம் தேதி ஷா ஆலாமில் உள்ள மரண விசாரணை நீதிமன்றத்திற்கு அனுப்பப்பட்டு விட்டதாக பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஷாருல்நிஸாம் ஜாஃபார் கடந்த செப்டம்பர் 19 ஆம் தேதி தங்களிடம் தெரியப்படுத்தியிருப்பதாக வழக்கறிஞர் மஹாஜோத் சிங் தெரிவித்தார்.
டாக்டர் சிந்துமதி, கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டேபார் 8 ஆம் தேதி தாம் தங்கியிருந்த வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரின் மரணம் தொடர்பான விசாரணையில் இதுவரையில் எந்தவொரு முடிவும் கண்டறியப்படாதது அவரின் குடும்பத்திற்கு அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில் டாக்டர் சிந்துமதி இறப்பு தொடர்பில் விரைவில் மரண விசாரணை நடைபெறுமானால் அவரின் இறப்பில் புதைந்திருக்கும் மர்மங்கள் விலகலாம் என்று எதிர்பார்க்கப்படுவதாக வழக்கறிஞர் மஹாஜோத் சிங் குறிப்பிட்டார்.
டாக்டர் சிந்துமதியின் உடலில் பிரேதப் பரிசோதனை மேற்கொண்ட மருத்துவர்களின் அறிக்கைகளில் முரண்பாடுகள் இருந்ததைத் தொடர்ந்து மரண விசாரணையைத் தொடங்குவதற்கு அடிப்படையாக அமைந்துள்ளது என்று மஹாஜோத் சிங் தெரிவித்தார்.
முந்தைய பிரேதப் பரிசோதனை அறிக்கையில் டாக்டர் சிந்துமதியின் இறப்புக்காக காரணம், Asfiksa வாயு மற்றும் வாய்க்குள் உள்ளிழுக்கப்பட்ட பிளாஸ்டிக் பைகளால் மரணம் சம்பவிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் கடந்த செப்டம்பர் 3 ஆம் தேதி சட்டத் துறை தலைவர் டுசுகி மொக்தாருக்கு எழுதப்பட்ட கடிதத்தில் டாக்டர் சிந்துமதியின் மரணம், சந்தேகத்திற்கிடமான சூழ்நிலையில் நிகழ்ந்துள்ளது என்றும், அவரின் மரணம் இயற்கையானது அல்ல என்றும் சவப் பரிசோதனை நிபுணர், மரணச் சான்றிதழை வழங்கியுள்ளார்.
டாக்டர் சிந்துமதியின் மரணம் தொடர்பில் பல்வேறு சந்தேகங்களை முன்னிறுத்தி அவரின் குடும்பத்தினர் இதுவரையில் 28 போலீஸ் புகார்களைச் செய்துள்ளனர். எனினும் விசாரணையின் முடிவு என்ன ஆனது என்று குடும்ப உறுப்பினர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.








