பட்டர்வொர்த், மார்ச்.29-
பினாங்கு மாநிலத்தில் புதிய நில வரி விகிதங்கள் தொடர்பாக நிலவி வரும் கருத்து வேறுபாடுகளைக் களைவதற்காக, அம்மாநில முன்னாள் முதலமைச்சர் லிம் குவான் எங் உடனான சந்திப்பிற்கான தேதியை முடிவு செய்யும் அதிகாரத்தை டிஏபி பொதுச் செயலாளர் அந்தோணி லோக்கிடம் இந்நாள் முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் ஒப்படைத்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கத் தேவையான அனைத்து அறிக்கைகளையும் தாம் ஏற்கனவே தயார் செய்து வைத்துள்ளதாகக் குறிப்பிட்ட சாவ் கோன் இயாவ், கட்சித் தலைமையின் அறிவிப்பிற்காகக் காத்திருப்பதாகத் தெரிவித்தார்.
தற்போதைய உலகளாவிய பொருளாதாரச் சூழலில் இரு மூத்த தலைவர்களுக்கிடையிலான பகிரங்க மோதல் ஆரோக்கியமானது அல்ல எனத் தெரிவித்த அந்தோணி லோக், இந்தச் சிக்கலுக்குச் சுமூகமான தீர்வு காண கட்சியின் மத்தியத் தலைமை முனைப்புடன் இருப்பதை உறுதிப்படுத்தினார். மாநில அரசின் நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்யும் அதே வேளையில், வணிக மண்டலங்களுக்கான நில வரி மாற்றங்கள் மக்களின் நிலையை உணர்ந்து சமநிலையுடன் இருக்க வேண்டும் என்பதே இச்சந்திப்பின் முக்கிய நோக்கமாகக் கருதப்படுகிறது.








