வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில் ஜோகூர்,யோங் பெங், ஆர்&ஆர் வாகன ஓய்வுத் தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த காரில் மூன்று ஆடவர்கள் இறந்து கிடந்த சம்பவத்திற்கான காரணங்கள் ஆராயப்பட்டு வரும் வேளையில் காரின் இயந்திரம் செயல்பட்டுக்கொண்டிருந்த நிலையில் மூவரும் களைப்பினால் உறங்கியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
அந்த மூவரும் கெந்திங் ஹைலண்ட்ஸிலிருந்து, ஜோகூர், பாசீர் கூடாங், தாமான் அயர் பிரு என்ற இடத்தை நோக்கி திரும்பி கொண்டு இருந்த போது யோங் பெங், ஆர்&ஆர் வாகன ஓய்வுத் தளத்தில் காரை நிறுத்தி விட்டு இளைப்பாறியிருக்கலாம் என்று நம்பப்படுவதாக பத்து பஹத் மாவட்ட போலீஸ் தலைவர் ஷாஹ்ருலானுார் முஷாதத் தெரிவித்தார். அவர்கள் பயன்படுத்திய கார், ஜோகூரிலிருந்து நண்பர் ஒருவரிடம் இரவலாக பெற்றதாகும். காரின் குளிரூட்டி, தொடர்ந்து செயல்பட்டு கொண்டு இருந்த போது அதிலிருந்து நச்சு வாயு வெளியேறி இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. அனைத்து கதவுகளும் மூடப்பட்ட நிலையில் அவர்கள் அந்த நச்சு வாயுவை நுகர்ந்து இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
நேற்று இரவு 8.50 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் 23, 25,27 வயதுடைய மூவர் காருக்குள்ளேயே உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.








