கோலாலம்பூர், அம்பாங் பகுதியில் திருடப்பட்ட கேபிள்களை ஏற்றிச் சென்ற மற்றொரு வாகனத்திற்கு போலீஸ் ரோந்து வாகனம் பாதுகாப்புக்குச் சென்றதாக சமூக ஊடகங்களில் வெளியான தகவல்களை போலீசார் மறுத்துள்ளனர்.
அதேவேளையில், சம்பந்தப்பட்ட கேபிள் திருட்டில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து புக்கிட் அமான் குற்றத் தடுப்பு மற்றும் சமூக பாதுகாப்பு துறை இயக்குநர் நூர் ஹிசாம் நோர்டின் கூறுகையில், திருடர்களுடன் போலீசார் கூட்டு சேர்ந்ததாக வெளியான குற்றச்சாட்டுகள் உண்மையல்ல எனத் தெரிவித்துள்ளார்.
அம்பாங் ஜெயா போலீஸ் தலைமையகத்தின் செயல்பாட்டு அறைக்கு கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே போலீசாரின் ரோந்து வாகனம் அங்கு சென்றதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், வழக்கமான செயல்பாட்டு நடைமுறைகளின்படி ரோந்து வாகனத்தின் எச்சரிக்கை விளக்கு இயக்கப்பட்டதாகவும் நூர் ஹிசாம் நோர்டின் விளக்கமளித்துள்ளார்.








