நாட்டின் வேலையில்லாதோர் விழுக்காடு குறைந்து வருவதாக மனிதவள அமைச்சர் வி. சிவக்குமார் தெரிவித்தார். கடந்த 2022 ஆம் ஆண்டில் இறுதிக் காலண்டில் 3.6 விழுக்காடாகப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், 2023 ஆம் ஆண்டு முதல் காலாண்டில் 3.5 விழுக்காடாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் தகவல் வெளியிட்டார்.
வேலை தேடும் முறையில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. குறிப்பாக, இளைஞர்கள் அதிகமாக வேலை தேடும் முயற்சியில் இறங்கி இருப்பதையும் வேலை தேடும் 40 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கு உதவ பல்வேறு முயற்சிகள் அரசாங்கத்தால் செயல்படுத்தப்பட்டதாகவும் சுட்டிக் காட்டினார்.
கோவிட்-19 பெருந்தொற்றின்போது பலர் வேலையில் இருந்து நிறுத்தப்பட்டுள்ளனர். பின்னர், நாடு கட்டம் கட்டமாய் வழக்கு நிலைக்குத் திரும்புகின்ற வேளையில், அவர்கள் தங்கள் ஆர்வங்களுக்கும் திறமைக்கும் ஏற்ற வேலைகளைத் தேடிக் கொண்டார்கள். பெரும்பான்மையோர் அதில் தொடர்ந்து நிலைத்திருக்கவும் செய்தார்கள். எனவே வேலையில்லாத் திண்டாட்டம் இறங்கு முகத்தைப் பதிவு செய்கிறது என இன்று செபாங் தீவில் நடந்த ஜெலாஜா மடானி பெர்சமா மந்திரி சும்பர் மனுசிய நிகழ்ச்சியை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்து உறையாற்றுகயில் அவர் குறிப்பிட்டார்.
இதனிடையே, MYFutureJobs இணையத் தளத்தின் தரவுகளின் அடிப்படையில், கடந்த 2022 முதல் 2023 செப்டம்பர் மாதம் வரையில், நாடு முழுவதும் 4 லட்சத்து 55 ஆயிரத்து 350 பேர் பல்வேறு துறைகளில் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளதாகவும் பெர்கேசோன் போன்ற அரசாங்க நிறுவனத்தின் முயற்சியால் நாட்டில் வேலையின்மையைக் குறைப்பதோடு தொழில்திறன் பயிற்சிகளால் வேலை தேடுகிறவர்கள் திறன் வாய்ந்தவர்களாக வேலைச் சந்தைக்குள் நுழைய வழி வகை செய்திருப்பதாக அவர் மேலும் சொன்னார்.








