கோலாலம்பூர்,ஜன.22
அரசாங்கத்திற்கு 450 கோடி வெள்ளி பெறுமானமுள்ள வாகன கொள்முதல் மற்றும் பராமரிப்பு ஒப்பந்தம் தொடர்பாக முன்னாள் நிதி அமைச்சர், பிரபல வர்த்தகர் மற்றும் அரசாங்கத்தின் சில முக்கிய அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்படும் என்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் தலைமை ஆணையர் தான் ஶ்ரீ அசாம் பாக்கி தெரிவித்துள்ளார்.
சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தப்படுவதற்கு ஏதுவாக அவர்களுக்கு எஸ்பிஆர்எம் அழைப்பாணை அனுப்பியுள்ளதாக அஸாம் பாக்கி குறிப்பிடடார். இதன் தொடர்பில் பிரபல வர்த்தகரும், கோடீஸ்வரருமான டான்ஸ்ரீ அந்தஸ்தை கொண்டுள்ள பிரமுகர் ஒருவரின் வீட்டில் கடந்த வியாழக்கிழமை எஸ்பிஆர்எம் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தியிருப்பதை அஸாம் பாக்கி உறுதிபடுத்தியுள்ளார்.
வாகனங்கள் கொள்முதல் மற்றும் அவற்றை பராமரிக்கும் பணி தொடர்பாக சம்பந்தப்பட்ட வர்த்தகருக்கு சொந்தமான நிறுவனத்திற்கு 450 கோடி வெள்ளி மதிப்புள்ள குத்தகை எதன் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்த எஸ்பிஆர்எம் தற்போது தீவிரமாக புலன் விசாரணை செய்து வருவதாக அஸாம் பாக்கி குறிப்பிட்டார்.








