கோலாலம்பூர், டிசம்பர்.18-
வரும் 2026-ஆம் ஆண்டில் நாட்டில் உள்ள 10 முக்கிய நெடுஞ்சாலைகளில் டோல் கட்டணம் உயர்த்தப்படாது என்று அரசாங்கப் பேச்சாளர் டத்தோ ஃபாமி ஃபாட்சீல் தெரிவித்துள்ளார்.
நேற்று புதன்கிழமை பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக டத்தோ ஃபாமி குறிப்பிட்டார்.
இந்த முடிவினால் ஏற்படும் நிதிச் சுமையை அரசாங்கமே ஏற்கும் என்றும், இதன் மூலம் மக்களுக்கு ஏற்படும் பொருளாதாரச் சுமை குறைக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்த 10 நெடுஞ்சாலைகள் எவை என்பது குறித்த விரிவான பட்டியலைப் பொதுப்பணி அமைச்சு விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடும் என்று டத்தோ ஃபாமி குறிப்பிட்டுள்ளார்.
வாழ்க்கைச் செலவின உயர்வைச் சமாளிக்க மக்களுக்கு உதவும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் டத்தோ ஃபாமி தெரிவித்துள்ளார்.








