பெட்டாலிங் ஜெயா, செப்டம்பர்.24-
சம்மதத்துடன் உறவு கொள்ளும் வயது குறைந்த பெண்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கூறிய கிளந்தான் காவல்துறை தலைவர் டத்தோ முகமட் யுசோஃப் மாமாட்டின் கருத்துக்கு, பெண்கள் உரிமைகளுக்கான கூட்டமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இத்தகைய கருத்துக்கள் பாதிக்கப்பட்டவர்களையே குற்றவாளிகளாகச் சித்தரிக்கும் நிலையை வலுப்படுத்துவதோடு, குழந்தைகளின் நலனுக்காக கொண்டு வரப்பட்ட குழந்தைகள் சட்டம் 2001-ஐ புறக்கணிக்கிறது என்றும் அவ்வமைப்பு குறிப்பிட்டுள்ளது.
அதே வேளையில், காவல்துறை உயரதிகாரிகளுக்கு குழந்தைகளின் உரிமைகள், பாலினக் கண்ணோட்டங்கள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து, முறையாகப் பயிற்சி அளிக்குமாறும் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.
சிறார் பாலியல் செயல்பாடுகளை முறையாகக் கையாள்வதற்கும், தடுப்பதற்கும், குழந்தைக் கல்வி, சமூக விழிப்புணர்வு மற்றும் வலுவான சமூகப் பாதுகாப்புடன் கூடிய அணுகுமுறைகள் அவசியம் என்றும் அவ்வமைப்பு சுட்டிக் காட்டியுள்ளது.








