Oct 25, 2026
Thisaigal NewsYouTube

ஆறாம் படிவ மாணவர்களுக்கு 2,500 ரிங்கிட் செலவுத் தொகை: அடுத்த ஆண்டு முதல் பருவத்திலிருந்து தொடக்கம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
ஆறாம் படிவ மாணவர்களுக்கு 2,500 ரிங்கிட் செலவுத் தொகை: அடுத்த ஆண்டு முதல் பருவத்திலிருந்து தொடக்கம்

அடுத்த ஆண்டு முதல் பருவத்திலிருந்து, அறாம் படிவ மாணவர்களுக்கு 2,500 ரிங்கிட் வாழ்க்கைச் செலவுத் தொகை வழங்கப்படும் என்று கல்வி அமைச்சர் டத்தோ ஸ்ரீ ஃபாட்லீனா சீடேக் தெரிவித்துள்ளார்.

2027-ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்ட இந்த உதவித்தொகையானது, அனைத்து ஆறாம் படிவ மாணவர்களின் பதிவு நடைமுறைகளும் நிறைவடைந்த பின்னர் வழங்கப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Nibong Tebal நாடாளுமன்றத் தொகுதி அளவில் இன்று நடைபெற்ற ‘ஜெலாஜா நெகாரா: அகு காசே மலேசியா நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாணவர்கள் தங்களின் முதல் பருவத்திலேயே இந்த உதவித்தொகையைப் பெறுவார்கள் என்றார்.

மேலும், மூன்று பருவங்களாகப் பிரித்து இந்தத் தொகை வழங்கப்படும் என்றும், ஒவ்வொரு பருவத்திற்கும் சுமார் 800 ரிங்கிட் ஒதுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இம்முயற்சியானது, ஆறாம் படிவ மாணவர்களின் கல்வித் தேவைகளுக்கு ஆதரவளிப்பதுடன், எஸ்டிபிஎம் எனப்படும் மலேசிய உயர்நிலைப் பள்ளிச் சான்றிதழ் தேர்வின் தரத்தை மேம்படுத்துவதிலும் அரசாங்கத்தின் உறுதிப்பாட்டைப் பிரதிபலிப்பதாக ஃபாட்லீனா விவரித்துள்ளார்.

இதனிடையே கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி மக்களவையில் 2027-ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தைத் தாக்கல் செய்த பிரதமரும் நிதி அமைச்சருமான டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், ஆறாம் படிவ மாணவர்களுக்கு 2,500 ரிங்கிட் வாழ்க்கைச் செலவுத் தொகை வழங்க அரசாங்கம் ஒப்புக் கொண்டுள்ளதாக அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மெட்ரிகுலேஷன் மாணவர்கள் பெறும் உதவித்தொகைக்கு இணையான இந்தத் தொகையால் நாடு முழுவதும் சுமார் 90,000 படிவம் ஆறு மாணவர்கள் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஆகஸ்ட் மாதம் சிலாங்கூர், கிள்ளானில் நடைபெற்ற ‘மடானி பிரி-யுனிவெர்சிட்டி காங்கிரஸ்’ மாநாட்டில் முன்வைக்கப்பட்ட 12 தீர்மானங்களில், படிவம் ஆறு மாணவர்களுக்கு வாழ்க்கைச் செலவுத் தொகை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் இடம் பெற்றிருந்தது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →