ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் உள்ள விக்டோரியா நாடாளுமன்றக் கட்டடத்துக்கு வெளியே மலேசிய தேசியக் கொடியான ஜாலூர் கெமிலாங்கைத் தலைகீழாகப் பறக்கவிட்டதாகக் கூறப்படும் மலேசியர்கள் குழுவுக்கு, சபா மற்றும் சரவாக் விவகாரத்துறை அமைச்சர் முஸ்தஃபா சக்மூட் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கிழக்கு மலேசியாவைச் சேர்ந்தவர்கள் என நம்பப்படும் அந்தக் குழுவினர், ஆஸ்திரேலியாவில் பதிவு செய்யப்பட்டுள்ள ‘சபா சரவாக் கெலுவார் மலேசியா’ என்ற அரசு சாரா அமைப்பின் உறுப்பினர்கள் ஆவர்.
இவர்கள் நேற்று மெல்பர்னில் உள்ள விக்டோரியா நாடாளுமன்றக் கட்டடத்துக்கு வெளியே நடைபெற்ற போராட்டத்தின் போது மலேசிய தேசியக் கொடியைத் தலைகீழாகப் பறக்கவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழுவினரின் செயல்பாடு சபா மற்றும் சரவாக் மக்களின் பண்பான, மரியாதைமிக்க கலாசாரத்தைப் பிரதிபலிக்கவில்லை என்பதை முஸ்தஃபா சக்மூட் சுட்டிக் காட்டியுள்ளார்.
மேலும், இத்தகைய செயல்கள் ஆஸ்திரேலியாவில் பணிபுரியும் மற்றும் கல்வி பயிலும் மலேசியர்களின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தக்கூடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.








