தொழிலாளர் தங்குமிட வசதிக்கான விதிமுறையை ஊராட்சி மன்ற மேம்பாட்டு அமைச்சு தயாரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
தொழிலாளர் நலன் பேணப்படுவதையும் அந்த விதிமுறைகள் சட்டத்திற்கு உட்பட்டதாக இருப்பதையும் உறுதி செய்யும் எனவும் அவ்வமைச்சு தெரிவித்தது.
2024-2026 வரையிலான குறுகிய கால பணியாளர் தங்குமிட விதிமுறையை தயாரித்து இருப்பதாகவும் நீண்டகால அமலாக்கத்திற்கான பணியாளர் தங்குமிட வரையறையையும் வழிகாட்டுதல்களையும் அமைச்சு தயாரிக்க இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
மாநில நிலையிலான அதிகாரிகள், ஊராட்சி மன்ற நிலையிலான அதிகாரிகள், அரசு நிறுவனங்கள், மேம்பாட்டாளர்கள், குத்தகையாளர்கள், முதலாளிகள், தங்குமிட வசதியை வழங்குநர்கள் என பல்வேறு தரப்பினருக்கு இந்த வரையறை பயன்படும் என அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வீட்டுவசதி, தங்குமிடம், பணியாளர் வசதிகள் குறித்த குறைந்தபட்ச தரநிலைகள் சட்டம் 1990 தைன் படியும் இதர தொடர்புடைய சட்டங்களின் படியும் வெளிநாட்டு , உள் நாட்டுத் தொழிலாளர்களின் தேவைக்கு ஏற்ப அந்த வரையறை அமையும்.
முன்னதாக, நெருக்கடியான, குறுகலான தங்குமிடத்தில் வசிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ள வெளிநாட்டுத் தொழிலாளர்களின் நலன் குறித்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
அச்செய்திகளில், சரியான கழிப்பறை, குளியலறை வசதிகள் இல்லாமல் அதிக நெரிசலான தங்குமிடங்களில் பல வெளிநாட்டு தொழிலாளர்கள் வாழ்ந்து கொண்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.








