வல்லரசு நாடுகளான அமெரிக்கா, சீனா போன்றவற்றுடன் மலேசியா தொடர்ந்து அணுக்கமான உறவை கொண்டு இருக்கும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார். உலகளாவிய பொருளாதார விவகாரங்களில் அந்நாடுகளுடன் மலேசியா நட்பு பாராட்டும் என்று பிரதமர் விளக்கினார்.
சிற்சில விவகாரங்களில் கருத்து மோதல்கள் நிலவினாலும் அரச தந்திர உறவின் வாயிலாக தீர்வு காண்பது மூலம் அவற்றின் தாக்கத்தை மலேசியாவினால் குறைக்க முடியும் என்று பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார்.
அமெரிக்கா, சான் ஃப்ரான்சிஸ்கோவில் கெலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் ஆசிய பசிபிக் வட்டாரத்தில் நிலவி வரும் நெருக்கடி தொடர்பான சொற்பொழிவு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் பிரதமர் இதனை தெரிவித்தார். இந்நிகழ்வில் 250 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
பருவநிலை மாற்றம், ஆள்பலம் பரிமாற்றம், கல்வி, மக்களுக்கு இடையிலான உறவு ஆகியவற்றில் அமெரிக்கா, சீனாவுடன் மலேசியா நல்லுறவை கொண்டு இருப்பதற்கு போதுமான இடம் இருப்பதாக பிரதமர் குறிப்பிட்டார்.








