கோலாலம்பூர், அக்டோபர்.11-
போதைப் பொருள் கடத்திய குற்றத்திற்காக கடந்த அக்டேபார் 8 ஆம் தேதி புதன்கிழமைகிழமை சிங்கப்பூர் சாங்கி சிறைச்சாலையில் தூக்கிலிடப்பட்ட ஒரு மலேசியப் பிரஜையான பன்னீர் செல்வம் பரந்தாமன், தூக்கிலிடப்படுவதற்கு 5 தினங்களுக்கு முன்பு, தனது வழக்கறிஞர் Too Xing Ji என்பவருக்கு எழுதிய ஆகக் கடைசியான கடிதம் இன்று வெளியிடப்பட்டது.
சிங்கப்பூர் வழக்கறிஞருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்ளும் வகையில் நெகிழ்ச்சியூட்டும் வார்த்தை பிரயோகங்களைப் பயன்படுத்தி பன்னீர் செல்வம் தனது கடைசி கடிதத்தை எழுதியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மரணத் தண்டனையை நிறுத்தி வைக்க தவறிய போதிலும் தம்மை தூக்குக் கயிற்றின் பிடியிலிருந்து காப்பாற்றுவதற்காகக் கடைசி நேரம் வரை தாங்கள் நடத்திய சட்டப் போராட்டத்திற்காக தாம் தலை வணங்குவதாக பன்னீர் செல்வம் குறிப்பிட்டுள்ளார்.
ஆகக் கடைசியாக கருணை மனுவிலாவது ஏதாவது செய்ய முடியுமா? என்று முயற்சிக்குமாறு வழக்கறிஞர் Too Xing Ji –யை கேட்டுக் கொண்டுள்ளார்.
நாம் எதிர்பார்த்ததைப் போல் பலன் கிட்டாமல் போகலாம். ஆனால், நாம் நடந்த வந்த பயணத்தை மீள்பார்வையிட்ட போது, செழுமை குன்றாமல் உள்ளது. அதில் மனிதர்களைப் பற்றி அதிகமாகக் கற்றுக் கொண்டேன். நீங்கள் ஓர் அற்புதமான மனிதர். உங்களையும், உங்கள் குடும்பதினரையும் இயேசு நேசிப்பார். இப்படிக்கு விடைபெறும் உங்கள் அன்பான நண்பர் என்று எழுதி, அந்த கடிதத்தில் 38 வயதுடைய பன்னீர் செல்வம் கையெழுத்திட்டுள்ளார்.
பன்னீர் செல்வம் எழுதிய அந்த கடிதத்தை சம்பந்தப்பட்ட வழக்கறிஞர் தமது முகநூலில் பதிவேற்றம் செய்து இருப்பதுடன் அந்த மலேசிய இளைஞருக்கு தனது இறுதி அஞ்சலியைத் தெரிவித்துக் கொண்டார்.








