புத்ராஜெயா, ஆகஸ்ட்.06-
கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் 2 ஆவது முனையத்தில், மலேசியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைய முயற்சி செய்த 16 இந்தோனேசியர்கள், விமான நிலையத்திலேயே தடுக்கப்பட்டு, உடனடியாக அவர்களின் தாயகத்திற்குத் திரும்ப உத்தரவிடப்பட்டனர்.
30 க்கும் 57 க்கும் இடைப்பட்ட வயதுடைய ஆண்களையும், பெண்களையும் உள்ளடக்கிய அந்த 16 இந்தோனேசியர்கள் சுராபாயாவிலிருந்து வந்ததாகவும், அவர்களின் இறுதி விமானப் பயண இலக்கு தாய்லாந்து, ஹட்-ஜாய் நகரமாகும் எனவும் மலேசிய எல்லைக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு ஏஜென்சி ஓர் அறிக்கையில் தெரிவித்தது.
அந்த 16 பேரில் 15 பேர், ஏற்கனவே மலேசியாவில் அனுமதிக்கப்பட்ட காலத்தை விட கூடுதல் நாட்கள் தங்கியிருந்ததற்காகக் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். இன்னொருவர் முறையான அடையாள ஆவணத்தைச் சமர்ப்பிக்கத் தவறிவிட்டார் என அந்த ஏஜென்சி தெரிவித்துள்ளது.








