கோத்தா பாரு, செப்டம்பர்.14-
கெத்தும், பசை, வேப் போன்ற போதைப் பொருட்களுக்கு அடிமையானவர்கள் தாமாக முன்வந்து சிகிச்சை பெற வேண்டும் என மலேசிய தேசிய போதைப்பொருள் தடுப்பு முகமை – ஏஏடிகே எச்சரித்துள்ளது. இல்லையெனில், கட்டாயமாக அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுவார்கள் என அதன் உதவி இயக்குநர் ஹமிஸா ஹைட்ஸீர் தெரிவித்தார்.
கடந்த மாதம் 22-ஆம் தேதி முதல் போதைப் பித்தர்கள், போதைப் பொருட்களின் தவறானப் பயன்பாடு சட்டம் 1983 இல் புதிய திருத்தங்கள் நடப்புக்கு வந்திருப்பதால், இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த சட்டத் திருத்தத்தின்படி, இனி போதைப் பொருட்கள் மட்டுமல்லாமல், கெத்தும், பசை, போதை மருந்து கலந்த வேப் திரவங்களைப் பயன்படுத்தினாலும் கைது செய்யப்படுவார்கள். சிகிச்சை மையங்களில் தங்குவதற்கு பயந்து பலர் சிகிச்சை பெற முன்வருவதில்லை. ஆனால், போதைப்பொருள் பயன்பாட்டின் நிலையைப் பொருத்து, சிகிச்சை முறைகள் மாறுபடும் என ஹமிஸான் குறிப்பிட்டார்.








