புத்ராஜெயா, அக்டோபர்.30-
கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் புதியதாகப் பொருத்தப்பட்டுள்ள ஏரோடிரேன் தொடர்பில் எந்தவொரு லஞ்ச ஊழல் அம்சம் இருக்குமானால் அது குறித்து மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் தாராளமாக விசாரணை செய்யலாம். இதில் போக்குவரத்து அமைச்சு தலையிடாது என்று அதன் அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார்.
மலேசியா ஏர்போர்ட்ஸ் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட் பொறுப்பின் கீழ் உள்ள ஏரோடிரேன் திட்டம் உட்பட அது தொடர்பாக எந்தவொரு புகாரும் கிடைக்குமானால் எஸ்பிஆர்எம் தாராளமாக புலன் விசாரணை நடத்தலாம். அமைச்சர் என்ற முறையில் எஸ்பிஆர்எம் விசாரணையில் தாம் தலையிட முடியாது என்று அந்தோணி லோக் திட்டவட்டமாகக் குறிப்பிட்டார்.
புதிய கட்டமைப்பு முறையில் கடந்த ஜுலை மாதம் செயல்படத் தொடங்கிய ஏரோடிரேன் இதுவரையில் இரண்டு முறை பழுதடைந்த இருப்பது அந்த ரயில் திட்டத்தில் லஞ்ச ஊழல் அம்சங்கள் இருக்குமா? என்ற சந்தேகங்கள் வலுத்து வருகின்றன.
எனினும் இது குறித்து அதிகாரப்பூர்வமான புகார் கிடைத்தால் மட்டுமே எஸ்பிஆர்எம் விசாரணை மேற்கொள்ளும் என்று அந்த ஆணையத்தின் தலைமை ஆணையர் டான் ஶ்ரீ அஸாம் பாக்கி நேற்று தெரிவித்து இருந்தார்.








