கோலாலம்பூர், ஜனவரி.04-
2026 மலேசியாவிற்கு வருகை தாருங்கள் ஆண்டின் இலக்கை அடைவதில் 'I LITE U' ஒளியமைப்புத் திட்டம் முக்கியப் பங்கு வகிக்கும் என்று வீடமைப்பு, ஊராட்சித்துறை அமைச்சர் ங்கா கோர் மிங் தெரிவித்தார்.
கோலாலம்பூரின் இரவு நேர அழகை மேம்படுத்துவதன் மூலம் அதிகமான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கவும், அதன் மூலம் உள்ளூர் பொருளாதாரத்தை வலுப்படுத்தவும் முடியும் என அமைச்சர் குறிப்பிட்டார்.
இந்த நவீன விளக்குக் கட்டமைப்பு, வெறும் அழகுக்காக மட்டுமல்லாமல், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் உதவும். ஒளிரும் வீதிகள் குற்றச் செயல்களைக் குறைக்க உதவுவதோடு, இரவு நேரங்களில் மக்கள் அச்சமின்றி நடமாட வழிவகை செய்யும் என்று ங்கா கோர் மிங் வலியுறுத்தினார்.
நேற்று இரவு கோலாலம்பூர், புக்கிட் பிந்தாங்கில் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமினால் அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைக்கப்பட்ட 'I LITE U' நிகழ்வில் உரையாற்றுகையில் அமைச்சர் ங்கா கோர் மிங் இதனைத் தெரிவித்தார்.
'I LITE U' திட்டத்தில் பயன்படுத்தப்படும் விளக்குகள் குறைந்த மின்சாரத்தைச் செலவிடும் சூழல் நட்பு தொழில்நுட்பத்தைக் கொண்டவை. இது நிலையான நகர்ப்புற வளர்ச்சியை நோக்கிய மலேசியாவின் பயணத்திற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என அமைச்சர் பெருமிதம் தெரிவித்தார்.
நகரங்களை அழகுபடுத்துவது என்பது மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதாகும். இந்தத் திட்டம் உள்ளூர் வணிகங்கள் செழிக்கவும், இரவு நேரங்களில் சிறு வணிகர்கள் கூடுதல் வருமானம் ஈட்டவும் வாய்ப்பாக அமையும் என்று அமைச்சர் தமது உரையில் சுட்டிக் காட்டினார்.








