Jun 26, 2026
Thisaigal NewsYouTube
நோர்வே காங்ஸ்பெர்க் நிறுவனத்திடம் 1.06 பில்லியன் ரிங்கிட் இழப்பீடு கோருகிறது மலேசியா / நாடாளுமன்றத்தில் தற்காப்பு அமைச்சர் தகவல்
தற்போதைய செய்திகள்

நோர்வே காங்ஸ்பெர்க் நிறுவனத்திடம் 1.06 பில்லியன் ரிங்கிட் இழப்பீடு கோருகிறது மலேசியா / நாடாளுமன்றத்தில் தற்காப்பு அமைச்சர் தகவல்

Share:

மலேசிய கடற்படைக்கான எல்.சி.எஸ் போர்க்கப்பல்கள் கொள்முதல் ஒப்பந்தம் இரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, நார்வே நாட்டைச் சேர்ந்த காங்ஸ்பெர்க் தற்காப்பு மற்றும் விண்வெளி நிறுவனத்திடமிருந்து சுமார் 1.06 பில்லியன் ரிங்கிட் இழப்பீட்டை மலேசியா கோரியுள்ளதாக தற்காப்பு அமைச்சர் டத்தோ ஸ்ரீ முகமது காலிட் நார்டின் தெரிவித்துள்ளார்.

இந்த இழப்பீட்டு கோரிக்கையில் 129.86 மில்லியன் யூரோ அதாவது மலேசிய மதிப்பில் 609 மில்லியன் ரிங்கிட் என்பது அரசாங்கம் ஏற்கனவே செலுத்திய தொகையை உள்ளடக்கிய நேரடி இழப்புகளுக்காக கோரப்பட்டுள்ளது.

மேலும், ஏவுகணை ஒப்பந்தம் இரத்து செய்யப்பட்டதால் ஏற்பட்ட கூடுதல் செலவுகள் மற்றும் அதன் விளைவாக ஏற்பட்ட பிற சேதங்களுக்கு, 96.26 மில்லியன் யூரோ, மலேசிய மதிப்பில் 451 மில்லியன் ரிங்கிட், மறைமுக இழப்பீடாக கோரப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் இன்று அளித்த எழுத்துப்பூர்வ பதிலில் காலிட் தெரிவித்துள்ளார்.

கே.டி மகாராஜா லேலா போர்க்கப்பலின் கடல் சோதனை தற்போது எந்த நிலையில் உள்ளது என்பதையும், நோர்வே ஏவுகணை ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதால் அரசாங்கத்திற்கு ஏற்பட்ட கூடுதல் செலவுகள் குறித்தும் தானா மேரா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஸ்ரீ இக்மால் ஹிஷாம் அப்துல் அஜீஸ் எழுப்பிய கேள்விக்கு காலிட் மேற்கண்ட பதிலைத் தெரிவித்துள்ளார்.

அதேவேளையில், கே.டி மகாராஜா லேலா போர்க்கப்பல் குறித்து காலிட் வெளியிட்ட தகவலில், போர்க்கப்பலானது மலேசிய கடற்படையிடம் அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்படுவதற்கு முன்பு, கப்பலின் செயல்திறனை உறுதிப்படுத்தும் வகையில் கட்டம் கட்டமாக பல்வேறு சோதனைகள் மற்றும் மதிப்பீடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஏப்ரல் 29-ஆம் தேதி, லூனாஸ் நிறுவனத்தால் நடத்தப்பட்ட கடல்சார் சோதனை திட்டமிட்டபடி மேற்கொள்ளப்பட்டதாகவும், அதில் "நேர்மறையான முன்னேற்றம்" காணப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related News