இஸ்லாம் சமயத்தை அவமதித்த குற்றத்தை ஒப்புக்கொண்ட சிங்கப்பூரைச் சேர்ந்த பாதுகாப்பு ஊழியர் ஒருவருக்கு 14 நாட்கள் சிறைத்தண்டனையும் 7,000 ரிங்கிட் அபராதமும் விதித்து ஜொகூர் பாரு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் தீர்பளித்தது.
குற்றம் சாட்டப்பட்ட 56 வயதான முகமட் அனிம் அதாம் அபராதத் தொகையைச் செலுத்தத் தவறினால், மேலும் மூன்று மாதங்கள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
மாஜிஸ்திரேட் ஏ. ஷார்மினி முன்னிலையில், துணை அரசு வழக்கறிஞர் ஈஸ்லான் அசார் அரசு தரப்பு வாதங்களை முன்வைத்தார்.
ஜூலை 30 அல் - குர்ஆனைக் குறிப்பிட்டு, ஒரு தனிநபரின் மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையிலான வார்த்தைகளை வேண்டுமென்றே பேசியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
வழக்கறிஞர் எவருமின்றி ஆஜரான குற்றம் சாட்டப்பட்டவர், தனக்கு உயர் இரத்த அழுத்தம் இருப்பதையும், விவாகரத்து தொடர்பான நீதிமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்க வேண்டியிருப்பதையும் சுட்டிக்காட்டி, அபராதம் மட்டுமே விதிக்குமாறு கேட்டுக்கொண்டார்.
இருப்பினும், குற்றம் சாட்டப்பட்டவரின் செயல் '3R' விவகாரங்களை சார்ந்ததாக இருந்ததையும், இச்சம்பவம் குறித்த பதிவு சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டதையும் கருத்தில் கொண்டு, குற்றத்திற்கு ஏற்ற தண்டனையை வழங்குமாறு அரசுத் தரப்பு வலியுறுத்தியது.








