Dec 4, 2025
Thisaigal NewsYouTube
தாய்லாந்து – கம்போடியா போர் நிறுத்தம்: டத்தோ ஶ்ரீ அன்வாரின் முயற்சிக்கு அமெரிக்கா பாராட்டு
தற்போதைய செய்திகள்

தாய்லாந்து – கம்போடியா போர் நிறுத்தம்: டத்தோ ஶ்ரீ அன்வாரின் முயற்சிக்கு அமெரிக்கா பாராட்டு

Share:

கோலாலம்பூர், ஜூலை.29-

தாய்லாந்துக்கும், கம்போடியாவுக்கும் இடையில் போர் நிறுத்தத்திற்கு உடன்பாடு காண ஆசியான் தலைவர் என்ற முறையில் அவ்விரு நாடுகளுக்கும் மத்தியஸ்தம் செய்து வைத்த மலேசியப் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமை பாராட்டுவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

ஆசியான் தலைவர் என்ற முறையில் மலேசியப் பிரதமரின் தலைமைத்துவத்திற்கும், போர் நிறுத்தப் பேச்சு வார்த்தையை நடத்துவதிலும் முக்கியப் பங்காற்றிய அன்வார் இப்ராஹிமிற்கு அமெரிக்கா நன்றி தெரிவித்துக் கொள்வதாக அந்த வல்லரசு நாடு தெரிவித்துள்ளது.

கடந்த ஜுலை 24 ஆம் தேதியிலிருந்து தாய்லாந்துக்கும் கம்போடியாவுக்கும் இடையில் நிகழ்ந்து வந்தப் போரை நிறுத்துவதற்கு தாய்லாந்து பிரதமர் பூம்தாம் வேசாயாசாய், கம்போடியா பிரதமர் ஹுன் மானெட் ஆகிய இருவரையும் நேற்று புத்ராஜெயாவிற்கு அழைத்திருந்த அன்வார், இரு நாடுகளின் சார்பிலும் பங்கேற்ற தூதுக் குழுக்களின் பேச்சுவார்த்தைக்கு தலைமையேற்று இருந்தார்.

இந்தப் பேச்சு வார்த்தையில் காணப்பட்டுள்ள இணக்கத்திற்கு ஏற்ப அனைத்து தரப்பினரும் தங்களுக்கான கடப்பாட்டை அனுசரிக்க வேண்டும் என்று அமெரிக்க வெளியறவு செயலாளர் மார்கோ ருபியோ வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, இரு நாடுகளின் தலைவர்களிடமும் அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்ப், தனித்தனியாகப் பேச்சு வார்த்தை நடத்தினார். அதன் பிறகு இரு நாடுகளும் போரை நிறுத்த, பேச்சு வார்த்தைக்கு இணங்கின.

அதன் அடிப்படையில் தாய்லாந்து, கம்போடியா பிரதமர்கள் நேற்று புத்ராஜெயாவில் அன்வார் முன்னிலையில் பேச்சு வார்த்தை நடத்தி நேற்று நள்ளிரவு முதல் போரை நிறுத்துவதென ஒப்புக் கொண்டனர்.

Related News