Oct 1, 2026
Thisaigal NewsYouTube

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: 5 கோரிக்கைகளை முன்வைத்து 3 குடும்பங்கள் புக்கிட் அமானில் மகஜர்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: 5 கோரிக்கைகளை முன்வைத்து 3 குடும்பங்கள் புக்கிட் அமானில் மகஜர்

கோலாலம்பூர், ஜனவரி.03-

கடந்த நவம்பர் 24-ஆம் தேதி மலாக்கா, டுரியான் துங்கால் பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் உயிரிழந்த மூன்று நபர்களின் குடும்பங்கள், இன்று கோலாலம்பூரில் உள்ள புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தில் அதிகாரப்பூர்வமாக ஆட்சேப மனுவை வழங்கின.

போலீஸ் படைத் தலைவர் டத்தோ ஶ்ரீ முஹமட் காலிட் இஸ்மாயிலிடம் 5 கோரிக்கைகளை முன் வைத்து அந்த மூன்று குடும்பங்களும் தங்களின் ஆட்சேப மனுவைச் சமர்ப்பித்தன.

தங்கள் வழக்கறிஞர்களான ஸையிட் மாலிக், ராஜேஷ் நாகராஜன் மற்றும் ஆகம அணியின் தலைவர் அருண் துரைசாமி ஆகியோரின் மூலமாக வழங்கப்பட்ட இந்த ஆட்சேப மனுவில், இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் சம்பந்தப்பட்டுள்ள போலீஸ்காரர்களுக்கு எதிராக ஐஜிபி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

போலீசார் மேற்கொண்ட இந்தத் துப்பாக்கிச் சூடு நடவடிக்கை நியாயமற்றது என்றும், இதில் உரிய நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

40 நாட்களுக்கு பிறகு புஷ்பநாதன் நடவடிக்கை குழுவினரால் சமர்ப்பிக்கப்பட்ட இந்த ஆட்சேப மனுவில், இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் விசாரணை தொடங்கப்பட்டுள்ளதால் இதில் சம்பந்தப்பட்ட அனைத்து போலீஸ்காரர்களும் முதலில் கைது செய்யப்பட வேண்டும் என்று அவர்கள் அறைகூவல் விடுத்தனர்.

விசாரணை முடிவும் வரையில் மலாக்கா மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஸுல்கைரி முக்தார் உட்பட இந்த துப்பாக்கிக் சூட்டுச் சம்பவத்தில் நேரடியாக சம்பந்தப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் 8 போலீஸ்காரர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இந்தச் சம்பவத்தில் பொய்யான அறிக்கையை வெளியிட்டு மக்களின் கவனத்தைத் திசை திருப்ப முயற்சி செய்ததாகக் கூறப்படும் முதலாவது சந்தேகப் பேர்வழியாக வகைப்படுத்தப்பட்டுள்ள மலாக்கா போலீஸ் தலைவர் டத்தோ ஸுல்கைரி முக்தார் கைது செய்யப்பட்டு, பணியிடை நீக்கம் செய்யப்பட வேண்டும் என்று மூன்று குடும்பத்தினரும் கோரிக்கை விடுத்துள்ளனர் என்று வழக்கறிஞர் ஸையிட் தெரிவித்தார்.

இந்தச் சம்பவத்தில் போலீஸ் துறையினர் நேரடியாக குற்றவியல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதால் மற்ற சம்பவங்களை விட இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தை மாறுபட்ட முறையில் கையாளப்பட வேண்டும் என்று மூன்று குடும்பத்தினரும் வலியுறுத்தினர்.

இதுபோன்ற குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் நிகழும் சம்பவங்களில் சம்பந்தப்படும் பொது மக்களை உடனடியாக கைது செய்யும் போலீஸ் துறையினர், சம்பவம் நிகழ்ந்து 40 நாட்கள் கடந்த நிலையில் இன்னும் யாரையும் கைது செய்யப்படாமல் இருப்பது, தங்களுக்கு ஏமாற்றத்தை அளிக்கிறது என்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் மீதான விசாரணையை வெளிப்படையின்றி, போலீசார் வேண்டுமென்றே தாமதப்படுத்துகின்றனர் என்றும் அவர்கள் குற்றஞ்சாட்டினர்.

போலீஸ் துறையினர் மேற்கொண்ட இந்த துப்பாக்கிச் சூடு நடவடிக்கை நியாயமற்றது என்றும், இதில் உரிய நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகளின் நடவடிக்கை குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட்டு, உண்மை நிலை தெளிவுபடுத்தப்பட வேண்டும் என்று மூன்று குடும்பங்களும் இன்று காலையில் ஒப்படைக்கப்பட்ட தங்கள் மனுவில் வலியுறுத்தி இருப்பதாக வழக்கறிஞர் ஸையிட் தெரிவித்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →