கோலாலம்பூர், டிசம்பர்.24-
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன், கூட்டரசுப் பிரதேச மேம்பாட்டுத் திட்டங்களில் நடந்த ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஒருவரை எஸ்பிஆர்எம் அதிகாரிகள் விசாரணை செய்யவுள்ளனர்.
தற்போது கிடைத்துள்ள புதிய ஆதாரங்களின் அடிப்படையில், இந்த நடவடிக்கையானது மேற்கொள்ளப்படவுள்ளது.
இது தொடர்பாக பல்வேறு நபர்களிடம் எஸ்பிஆர்எம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக அதன் தலைமை ஆணையர் டான் ஶ்ரீ அஸாம் பாக்கி தெரிவித்துள்ளார்.
என்றாலும், அந்த முன்னாள் அமைச்சரின் பெயரை அவர் வெளியிடவில்லை.
கூட்டரசுப் பிரதேசத்தில் மில்லியன் கணக்கான ரிங்கிட் மதிப்புள்ள திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்தது தொடர்பாக இந்த விசாரணை நடைபெறவுள்ளது.
விளம்பரப் பலகைகள் வைப்பது, அரசாங்கத்திற்குச் சொந்தமான நிலத்தில் ஒரு பகுதியை, மேம்பாட்டாளருக்கு மாற்றுவது உள்ளிட்டவைகள், இந்த விசாரணையில் அடங்கும் என்றும் எஸ்பிஆர்எம் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.








