கோத்தா பாரு, பிப்ரவரி.22-
கிளந்தான் மாநிலம் கோத்தா பாருவில் உள்ள பிரபலமான ஒரு தங்கும் விடுதிக்கு அருகே, குடிநுழைவுத் துறையினர் நடத்திய ஓப் செர்காப் எனும் அதிரடிச் சோதனையில் மனிதக் கடத்தல் கும்பல் முறியடிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையின் போது, கடத்தல் கும்பலின் மூளையாகச் செயல்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் 31 வயது மியன்மார் நாட்டு இளைஞர் ஒருவரும், உரிய ஆவணங்களின்றி நாட்டிற்குள் நுழைந்த 27 வெளிநாட்டினரும் கைது செய்யப்பட்டுள்ளதாக கிளந்தான் மாநிலக் குடிநுழைவுத் துறையின் துணை இயக்குநர் Nik Akhtarulhaq Nik Abdul Rahman தெரிவித்தார்.
கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை வேளையில் நடத்தப்பட்ட இந்தச் சோதனையின் போது, கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட நான்கு சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், தப்பியோட முயன்ற மியன்மார் நாட்டவர்களையும் சீன நாட்டவர்களையும் அதிகாரிகள் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு பிடித்துள்ளனர். கடல் வழியாகச் சட்டத்திற்குப் புறம்பாக மலேசியாவிற்குள் நுழைந்த இவர்கள் அனைவரும் தற்போது குடிநுழைவு சட்டத்தின் கீழ் விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.








