ஜோகூர் பாரு, ஜனவரி.16-
கடந்த ஆண்டு தனது மனைவி மற்றும் மகனைக் கொலை செய்ததாக நம்பப்படும், ஜோகூரைச் சேர்ந்த 33 வயது மருத்துவர் ஒருவர், மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றம் சாட்டப்படவுள்ளார்.
கடந்த டிசம்பர் 31-ஆம் தேதி, காலை 8.30 மணியளவில், பண்டார் டத்தோ ஓன் பகுதியிலுள்ள ஒரு வீட்டில், 36 வயதான அவரது மனைவியும், 4 வயதான மகனும் கொலையுண்டு கிடந்ததாக ஜோகூர் மாநில போலீஸ் தலைவர் அப்துல் ரஹாமான் அர்சாட் தெரிவித்துள்ளார்.
கழுத்தில் வெட்டுக் காயங்களுடன் அப்பெண் இறந்து கிடந்த நிலையில், அச்சிறுவனின் முகத்தில் நீல நிறத்தில் காயங்கள் இருந்ததால் மூச்சுத் திணறல் காரணமாக இறந்திருக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், அவ்வீட்டிலிருந்து வெட்டுக் கத்தி, தலையணை உள்ளிட்ட பொருட்களைக் கைப்பற்றிய போலீசார், கடந்த ஜனவரி 3-ஆம் தேதி அந்த மருத்துவரையும் கைது செய்தனர்.
கடந்த 13 நாட்களாக தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வந்த அந்த மருத்துவருக்கு, குற்றப் பின்னணி எதுவும் இல்லை என்பதோடு, போதைப் பொருட்களையும் அவர் பயன்படுத்தியிருக்கவில்லை என்பது சோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.








