கோலாலம்பூர், அக்டோபர்.12-
கோலாலம்பூர் டாமன்சாரா - பூச்சோங் நெடுஞ்சாலைச் சுங்கச் சாவடியில் நேற்றிரவு கட்டுப்பாட்டை இழந்த ஒரு குப்பை லாரி, வேகமாகக் குறுக்கே சென்று நடுவில் இருந்த சிமெண்ட் தடுப்புச் சுவரில் மோதி கோர விபத்தை ஏற்படுத்தியது. இந்த பயங்கரக் காட்சி சமூக ஊடகங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. விபத்து நடந்த சில நிமிடங்களில், லாரியை ஓட்டி வந்த இந்தோனேசிய நாட்டவரான ஓட்டுநர், காயமடைந்த தனது உதவியாளரைக் கூட கவனிக்காமல், சம்பவ இடத்திலிருந்து மர்மமான முறையில் தப்பியோடி விட்டதாக சுபாங் ஜெயா மாவட்டக் காவற்படையின் தலைவர் அசிஸ்டன் கமிஷனர் வான் அஸ்லான் வான் மாமாட் தெரிவித்தார்.
விபத்துக்குக் காரணமான இந்தோனேசிய ஓட்டுநரைக் காவற்படையினர் தீவிரமாகத் தேடி வருவதாக வான் அஸ்லான் தெரிவித்துள்ளார். ஓட்டுநரைக் கண்டறியும் பணியை துரிதப்படுத்தியுள்ள காவற்படை, பொதுமக்கள் இந்தத் தலைமறைவான ஓட்டுநர் குறித்த எந்தவொரு தகவலையும் காவற்படையிடம் தெரிவிக்குமாறு அவசர கோரிக்கை விடுத்துள்ளது. தகவல் கொடுப்பவர்களின் தகவல்களை இரகசியமாகப் பாதுகாக்க காவற்படை உறுதி அளித்துள்ளது.








