கோலாலம்பூர், டிசம்பர்.22-
1MDB ஊழல் வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜிப் ரசாக், தனது எஞ்சிய சிறைத் தண்டனையை காஜாங் சிறையிலேயே தொடர்ந்து அனுபவிக்கவுள்ளார்.
முன்னாள் மாமன்னர் வழங்கியதாகக் கூறப்படும் அந்தக் 'கூடுதல் அரசாணை' செல்லாது என்றும், அதனை செயல்படுத்த இயலாது என்றும் உயர்நீதிமன்ற நீதிபதி எலிஸ் லோக் யீ சிங் இன்று திங்கட்கிழமை தீர்ப்பளித்தார்.
இதனையடுத்து, எஸ்.ஆர்.சி இன்டர்நேஷனல் வழக்கில் குறைக்கப்பட்ட ஆறு ஆண்டுகள் சிறைத் தண்டனையை, வீட்டுக் காவலில் அனுபவிக்கக் கோரிய நஜிப்பின் விண்ணப்பம் நீதிமன்றத்தால் இன்று நிராகரிக்கப்பட்டது.
கூட்டரசு அரசியலமைப்புச் சட்டத்தின் 42 ஆவது விதியை மாமன்னர் பின்பற்றவில்லை என்று நீதிபதி எலிஸ் தமது தீர்ப்பில் சுட்டிக் காட்டினார்.
நஜீப்பின் பொது மன்னிப்பு தொடர்பாக விவாதிப்பதற்கு கூடிய 61 ஆவது மன்னிப்பு வாரியக் கூட்டத்தில் நஜீப்பின் தண்டனை குறைக்கப்பட வேண்டும் என்ற விவகாரம் மட்டும் விவாதிக்கப்பட்டதே தவிர அரசியல் சட்டம் 42 ஆவது விதி கோருவதைப் போல மற்ற விவகாரங்கள் எதுவும் விவாதிக்கப்படவில்லை என்று நீதிபதி தெளிவுப்படுத்தினார்.
எனவே நஜீப், தனது எஞ்சிய தண்டனைக் காலத்தை வீட்டுக் காவலில் கழிக்க வேண்டும் என்ற கோரிக்கையை மலேசிய அரசாங்கத்தினால் அமல்படுத்த இயலாது என்று நீதிபதி, தமது தீர்ப்பின் சாராம்சத்தை விளக்கினார்.
இந்நிலையில், உயர்நீதிமன்றம் இன்று வழங்கிய தீர்ப்பை எதிர்த்து, நஜிப் மேல்முறையீடு செய்யவுள்ளார்.
உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பை வழங்கிய உடனேயே, நஜிப்பின் வழக்கறிஞர் டான் ஶ்ரீ முகமட் ஷாஃபி அப்துல்லா, நஜிப் தனது வழக்கை மேல்முறையீடு செய்யவுள்ளதாக நீதிபதியிடம் தெரிவித்தார்.
மேலும், நீதிமன்றம் தனது எழுத்துப்பூர்வ தீர்ப்பை விரைவுபடுத்த வேண்டும் என ஷாஃபி விடுத்த கோரிக்கையை ஏற்ற நீதிபதி எலிஸ் லோக் யீ சிங், அதற்கு உதவுவதாகப் பதிலளித்தார்.
72 வயதான நஜிப், எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் சென்டிரியான் பெர்ஹாட் நிதியில் இருந்து, 42 மில்லியன் ரிங்கிட்டை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டு, கடந்த 2022 -ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23-ஆம் தேதி முதல் காஜாங் சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார்.
கடந்த 2024 ஆம் ஆண்டில், கூட்டரசுப் பிரதேச மன்னிப்பு வாரியம் அவரது சிறைத் தண்டனையை 12 ஆண்டுகளில் இருந்து ஆறு ஆண்டுகளாக குறைத்து, அபராதத்தை 210 மில்லியன் ரிங்கிட்டில் இருந்து 50 மில்லியன் ரிங்கிட்டாகக் குறைத்தது குறிப்பிடத்தக்கது.








