Dec 5, 2025
Thisaigal NewsYouTube
மலேசியாவின் முதலாவது புள்ளி விபர இலாகா தலைவர் ரமேஷ் சந்தர் காலமானார்
தற்போதைய செய்திகள்

மலேசியாவின் முதலாவது புள்ளி விபர இலாகா தலைவர் ரமேஷ் சந்தர் காலமானார்

Share:

மலேசியாவின் முதலாவது புள்ளி விபர இலாகாவின் தலைவர் ரமேஷ் சந்தர் காலமானார். அவருக்கு வயது 88. அமெரிக்காவில் நேற்று காலையில் அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.

நாடு சுதந்திரம் பெற்ற பிறகு தேசத் தந்தையும், முதல் பிரதமருமான துங்கு அப்துல் ரஹ்மான் தலைமையில் அமைக்கப்பட்ட அமைச்சரவையில் பிரதமர் துறையின் ​கீழ் உருவாக்கப்பட்ட புள்ளி விபர இலாகாவின் தலைமைப் பதவியை கடந்த 1966 ஆம் ஆண்டு முதல் 1977 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதி வரை சுமார் 11 ஆண்டுகள் ரமேஷ் சந்தர் வகித்தார்.

புள்ளி விபர இலாகா உருவாக்கப்பட்ட பின்னர் அதற்கு பொறுப்பேற்ற ரமேஷ் சந்தர், தமது மதிநுட்ப ​சிந்தனையால் வரைந்த வியூக முறையைதான், அவ்விலாகா இன்று வரை கடைப்பிடித்து வருகிறது என்று அவ்விலாகாவின் தலைவர் உசிர் மஹிதீன் தெரிவித்தார்.

மலேசியாவின் மக்கள் தொகை கணக்கெடுப்பிலும் மிகப்பெரிய பங்களிப்பை ரமேஷ் சந்தர் வழங்கியுள்ளார். , மலேசிய மக்களின் வறுமை நிலையை துடைத்தொழிப்பதற்கு 1970 ஆம் ஆண்டு வரையப்பட்ட புதிய பொருளாதார கொள்கையில் வறுமை ஒழிப்பு தொடர்பாக ரமேஷ் சந்தர் வரைந்த பிரதான கட்டமைப்புத் திட்டம்தான் முதன்மையாக பயன்படுத்தப்பட்டது.

காமன்வெல்த் நாடுகளின் புள்ளிவிபர இலாகா தலைவர்களுக்கான மாநாட்டில் மலேசியாவை பிரதிநிதித்தவரான ரமேஷ் சந்தர், ஆசியான் புள்ளி விபர மாநாட்டுத் தலைவராகவும் பொறுப்பு வகித்துள்ளார்.

பகாங், குவந்தானில் பிறந்து வளர்ந்தவரான ரமேஷ் சந்தர்,மலேசியா​வின் பிறப்பு, இறப்பு விகித கணக்கெடுப்பிலும் தனது பங்களிப்பை வழங்கியதுடன் உலக பிறப்பு விகிதம் தொடர்பாக அனைத்துலக கருவள அமைப்பின் தொழில்நுட்பக்குழுவிலும் முக்கிய பங்களிப்பை வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News