கெடா மாநிலத்தில் உரிமம் பெற்ற சூதாட்டத்தைத் தடை செய்ய புதிய வழிகளைத் தேடுவதற்குப் பதிலாக, முஸ்லிம்கள் சூதாட்டத்தில் ஈடுபடுவதைத் தடுக்க சிறந்த அமலாக்க நடவடிக்கைகளில் கெடா மந்திரி பெசார் சனுசி நோர் கவனம் செலுத்த வேண்டும் என்று ஜசெக சட்டப் பிரிவுத் தலைவர் ராம்கர்பால் சிங் வலியுறுத்தியுள்ளார்.
உரிமம் பெற்ற சூதாட்ட நிறுவனங்களின் உரிமத்தைப் புதுப்பிக்க மறுக்க முடியாது என்ற நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து கெடா அரசு மேற்கொண்ட மேல்முறையீட்டு முயற்சியை கடந்த ஆகஸ்ட் 12-ஆம் தேதி கூட்டரசு நீதிமன்றம் நிராகரித்தது.
இதையடுத்து, நீதிமன்றத் தீர்ப்பைத் தவிர்க்க வழி தேடாமல் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று ராம்கர்பால் கூறினார்.
“உரிமம் பெற்ற சூதாட்டம் சட்டபூர்வமானது. நீதிமன்றத்தின் முடிவு தெளிவானது. அதைச் சுற்றிவளைத்து புதிய வழிகளைத் தேடுவது சனுசியின் வேலை அல்ல,” என்று அவர் கடுமையாகச் சாடினார்.
முழுமையான சூதாட்டத் தடை விதிக்கப்பட்டால், அது சட்டவிரோத கறுப்புச் சந்தை கும்பல்கள் மற்றும் இணையவழி சூதாட்டத் தளங்களுக்கே அதிக வாய்ப்பை ஏற்படுத்தும் என்றும் அவர் எச்சரித்தார்.
சட்டத்தைச் சுற்றிவளைக்க முயல்வதை விட, முஸ்லிம்கள் சூதாட்டத்தில் ஈடுபடாமல் தடுப்பதற்கான அமலாக்க நடவடிக்கைகளில் சனூசி தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்று ராம்கர்பால் நேரடி சவால் விடுத்தார்.








