ஷா ஆலாம், செப்டம்பர்.20-
தற்போது தொடர்புத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்று இருக்கும் டத்தோ ஃபாமி ஃபாட்சீல், கூட்டரசு பிரதேசத்திற்கான பிரதமர் துறை அமைச்சராக நியமிக்கப்பட வேண்டும் என்று அம்னோ பரிந்துரை செய்துள்ளது.
இவ்வாண்டு இறுதியில் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படும் அமைச்சரவை சீரமைப்பில் லெம்பா பந்தாய் நாடாளுமன்ற உறுப்பினரான டத்தோ ஃபாமி, அப்பொறுப்புக்கு நியமிக்கப்பட வேண்டும் என்று கூட்டரசு பிரதேச அம்னோ தொடர்புக்குழுவின் தகவல் பிரிவுத் தலைவரான டத்தோ குலாம் முஸ்ஸாஃபார் வலியுறுத்தியுள்ளார்.
கூட்டரசு பிரதேசத்தில் கோலாலம்பூர் மாநகரில் முக்கியத் தொகுதியாக விளங்கும் லெம்பா பந்தாய் நாடாளுமன்ற உறுப்பினராக டத்தோ ஃபாமி விளங்குவதால் கூட்டரசு பிரதேசத்திற்கு உட்பட்ட கோலாலம்பூர், புத்ராஜெயா, லாபுவான் முதலியவற்றின் விவகாரங்களை உள்ளூர்வாசி என்ற முறையில் அவரால் சுலபமாகக் கையாள முடியும் என்று பத்து அம்னோ டிவிஷன் தலைவருமான குலாம் முஸ்ஸாஃபார் பரிந்துரைத்துள்ளார்.








