கோலாலம்பூர், ஜூலை.31-
நாட்டில் உள்ள இஸ்லாம் அல்லாத வழிபாட்டுத் தலங்களின் தேவைகளைப் புறக்கணிப்பதில்லை அல்லது அவற்றை கைவிடுவதில்லை என்ற கொள்கையில் அரசாங்கம் உறுதியாக இருந்து வருவதாக வீடமைப்பு, ஊராட்சித்துறை அமைச்சர் ங்கா கோர் மிங் தெரிவித்துள்ளார்.
கடந்த 2024 மற்றும் 2025 நாட்டின் வரவு செலவுத் திட்டங்களின் வாயிலாக நாடு முழுவதும் உள்ள இஸ்லாம் அல்லாத வழிபாட்டுத் தலங்களின் பராமரிப்புப் பணிகளுக்காக வீடமைப்பு, ஊராட்சித்துறை அமைச்சு வாயிலாக வருடாந்திர மானியமாக தலா 50 மில்லியன் ரிங்கிட்டை ஒதுக்கீடு செய்துள்ளதாக ங்கா கோர் மிங் குறிப்பிட்டார்.
வீடமைப்பு, ஊராட்சித்துறை அமைச்சு நிர்ணயித்துள்ள நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய இஸ்லாம் அல்லாத வழிபாட்டுத் தலங்களின் அமைப்புகள் தங்களின் வழிபாட்டுத் தலங்களின் பராமரிப்புத் தேவைகள், ஆபத்து அவசர தேவைக்களுக்கானக் கட்டுமானப் பணிகள் முதலியவற்றுக்கு இந்தப் பணம் ஒதுக்கீடு செய்யப்பட்டு வருவதாக அமைச்சர் விளக்கினார்.
நாடு முழுவதும் இஸ்லாம் அல்லாத 336 வழிபாட்டுத் தலங்களுக்கு 4 கோடியே 76 லட்சத்து 9,025 ரிங்கிட் 54 காசு ஒதுக்கப்பட்டுள்ளதாக ங்கா கோர் மிங் குறிப்பிட்டார்.
எஞ்சிய 92 லட்சத்து 30 ஆயிரம் ரிங்கிட் வரும் ஆகஸ்ட் மாதம் இறுதிக்குள் வழங்கப்பட்டு, ஒதுக்கப்பட்ட 50 மில்லியன் ரிங்கிட் முழுமையாகப் பட்டுவாடா செய்யப்பட்டு விடும் என்று அமைச்சர் தெளிவுபடுத்தினார்.








