கோலாலம்பூர், நவம்பர்.11-
மலேசிய ரிங்கிட்டின் தொடர் வீழ்ச்சியின் போது, அரசாங்கத்தைக் கடுமையாகக் குறைக் கூறி, தாக்கி வந்த எதிர்க்கட்சியினர், இன்று ரிங்கிட் வலுவடையும் போது அது குறித்து பாராட்டுவதற்கு அவர்களுக்கு ஒரு வார்த்தை கூட கிடைக்கவில்லை என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
கடந்த காலங்களில், ரிங்கிட் பலமுறை வீழ்ச்சிக் கண்டது. தற்போது அது வலுப் பெற்று வருகிறது. ஆனால் அது குறித்து யாரும் ஒரு வார்த்தை கூட பேசவில்லை என்று பிரதமர் தனது மன ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
2022 ஆம் ஆண்டு நாட்டின் பிரதமராகத் தாம் பொறுப்பேற்ற போது, ரிங்கிட்டின் தொடர் வீழ்ச்சிக்கு எதிர்க்கட்சிகளிடமிருந்து தாம் கடும் விமர்சனத்தைப் பெற்றதாக டத்தோ ஶ்ரீ அன்வார் நினைவு கூர்ந்தார்.
ஓர் அமெரிக்க டாலருக்கு எதிராக இன்று ரிங்கிட்டின் மதிப்பு 4 ரிங்கிட் 16 காசை எட்டி இருப்பதைப் பிரதமர் சுட்டிக் காட்டினார்.
ஆசியாவிலேயே சிறப்பாகச் செயல்படும் நாணயமாக ரிங்கிட் வகைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நாணய மதிப்பை நாம் தீர்மானிக்கவில்லை. நேர்மறையாக இருக்கும் கடன் மதிப்பீட்டால், S&P குளோபல் மதிப்பீட்டின் அடிப்படையில் ரிங்கிட்டின் மதிப்பு நிர்ணயிக்கப்படுகிறது என்று பிரதமர் தெளிவுபடுத்தினார்.
ரிங்கிட்டின் மதிப்பு தொடர்ந்து வலுவடைந்து வருவது, நாட்டின் எதிர்காலம், நிலையானதாகவும், வலுவானதாக இருக்கும் என்பதையே இது பிரிதிபலிக்கிறது என்று டத்தோ ஶ்ரீ அன்வார் குறிப்பிட்டார்.








