கோலாலம்பூர், செப்டம்பர்.25-
இஸ்தானா புக்கிட் துங்குவில் இன்று வியாழக்கிழமை காலை மாமன்னர் சுல்தான் இப்ராஹிமைச் சந்தித்த பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், தேசிய அளவிலான பிரச்சினைகள் குறித்து அவருக்கு விளக்கமளித்தார்.
மாமன்னரின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் இச்சந்திப்பு குறித்த தகவல்கள் பகிரப்பட்டுள்ளன. பூடி மடானி ரோன்95 மானிய விலை முதல் 47-வது ஆசியான் மாநாட்டிற்குத் தயாராவது வரையில் பல்வேறு விவகாரங்கள் இச்சந்திப்பில் கலந்தாலோசிக்கப்பட்டதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
47-வது ஆசியான் உச்சி மாநாடு இவ்வாண்டு அக்டோபர் 26-ஆம் தேதி முதல் அக்டோபர் 28-ஆம் தேதி வரையில் கோலாலம்பூரில் நடைபெறவுள்ளது.
இவ்வாண்டு மலேசியா ஆசியானுக்குத் தலைமை தாங்குவதோடு, "உள்ளடக்கம் மற்றும் நிலைத்தன்மை" என்ற கருப்பொருளின் கீழ் இந்த உச்சி மாநாட்டை நடத்தவுள்ளது.








