லங்காவியில் ஆலய வளாகத்திற்கு வெளியே சிவபெருமானின் முதன்மை ஆயுதமான திரிசூலத்தை சேதப்படுத்தியதாக 34 வயது தமிம் தஹ்ரி அப்துல் ரசாக் மீது இன்று லங்காவி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றம் சாட்டப்பட்டது.
கடந்த மார்ச் 8-ஆம் தேதி, லங்காவி, குவா, செலாட் பஞ்சூர்-இல் உள்ள ஸ்ரீ முனீஸ்வரர் ஆலயத்தின் பழைய இடத்தில் இருந்த ‘திரிசூலத்தை எட்டி உதைத்து, சேதப்படுத்தியதன் மூலம், இந்து சமயத்தை அவமதித்ததாக அவர் மீது குற்றவியல் சட்டம் பிரிவு 295-இன் கீழ் குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டது.
மாஜிஸ்திரேட் ஹெமி அனெரினா ஹாஜா மைதீன் முன்னிலையில் நிறுத்தப்பட்ட தமிம் தஹ்ரி தனக்கு எதிரான குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார்.
இந்த சம்பவத்திற்கு தமிம் தஹ்ரிக்கு எதிராக நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸ் புகார் செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர் வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றதால், அவரைக் கைது செய்ய இண்டர்போல் மூலம் சிவப்பு நோட்டீஸ் விடுக்க அரச மலேசிய போலீஸ் படை திட்டமிட்டிருந்தது.
எனினும், கடந்த வாரம் அவர் மலேசியா திரும்பி போலீசில் சரணடைந்தார். அரசுத் தரப்பு வழக்கறிஞர் ஐன் நூர் சோபியா நோரிடன் ஜாமீன் வழங்க எதிர்ப்புத் தெரிவித்த போதிலும், பிரதிவாதி தரப்பு வழக்கறிஞர் டத்தோ ஹனிஃப் ஹசன்-இன் வாதத்தை அடுத்து, நீதிமன்றம் அவருக்கு இரண்டு நபர்களின் உத்தராவாதத்துடன் 10 ஆயிரம் ரிங்கிட் ஜாமீன் அனுமதித்தது.
மேலும், அவரது கடப்பிதழை ஒப்படைக்கவும், இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை போலீஸ் நிலையத்தில் ஆஜராகவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. கெடா மாநில போலீஸ் தலைவர் டத்தோ அட்ஸிலி அபு ஷா இந்த விவகாரத்தைக் கண்காணித்து வந்த நிலையில், இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை வரும் ஆகஸ்ட் 23-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.








