ஜோகூர், பாரு - சிரம்பான் சாலையில் சிகமாட்டிற்கு அருகில் கடந்த வாரம் நிகழ்ந்த கோர விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று இந்தியர்கள் உயிரிழந்த சம்பவத்தில், சம்பந்தப்பட்ட டிரெய்லர் லாரி ஓட்டுநர் மீது இன்று செவ்வாய்க்கிழமை சிகமாட் மாஜிஸ்திரேட் நீமன்றத்தில் கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
கடந்த ஏப்ரல் 2-ஆம் தேதி, பிற்பகல் 3.50 மணியளவில் கெமாஸ் பாரு, தாமான் கோல்டன் ஹில் சாலை சந்திப்பு அருகே அதிவேகமாக வந்த டிரெய்லர் லாரி, முன்னால் சென்ற வேனின் பின்புறத்தில் பலமாக மோதியது. இதில் வேனில் பயணம் செய்த 72 வயது கே. மாயக் கிருஷ்ணன், அவரது 65 வயது மனைவி எஸ். சிவந்தை மற்றும் அவரது 75 வயது சகோதரர் வயது எஸ். பழனியாண்டி ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். அதே குடும்பத்தைச் சேர்ந்த மேலும் இருவர் படுகாயமடைந்தனர்.
இந்த விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநரான 29 வயது முகமது ஷபிக் சல்லே, மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நிறுத்துப்பட்டு, மரணத் தண்டனை அல்லது கூடிய பட்சம் 40 ஆண்டு சிறை மற்றும் 12 பிரம்படித் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் கொலை குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டது.
மாஜிஸ்திரேட் அமலினா ஜொஹார் முன்னிலையில் முகமது ஷபிக் சல்லே, மீதான குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.
இந்த கொலை வழக்கு உயர் நீதிமன்ற அதிகார வரம்பிற்கு உட்பட்டது என்பதால் அந்த லோரி ஓட்டுநரிடம் எந்தவொரு வாக்குமூலமும் பதிவு செய்யப்படவில்லை. அவருக்கு ஜாமீன் அனுமதி மறுக்கப்பட்டது.
மூவரின் உயிரை பறித்ததாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்ட லாரி ஓட்டுநர், சம்பவம் நிகழ்ந்த அன்று மெத்தாம்பேட்டமைன் எனும் போதைப்பொருள் உட்கொண்டிருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை, பிரேதப் பரிசோதனை மற்றும் தடயவியல் அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வரும் மே 21-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.








