பெட்டாலிங் ஜெயா, செப்டம்பர்.12-
கடந்த 2018 ஆம் ஆண்டு மரணமுற்ற அரச மலேசிய கடற்படையின் கேடட் அதிகாரி J. சூசை மாணிக்கம் இறப்பை, ஒரு கொலையென ஈப்போ உயர் நீதிமன்றம் வகைப்படுத்தியதைத் தொடர்ந்து அந்த அதிகாரியின் மரணம் தொடர்பில் புதிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அவரின் குடும்பதினர் போலீஸ் துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் மாதம் போலீசில் புகார் அளிக்கப்பட்ட போதிலும், போலீசார் இன்னமும் தங்களுடன் தொடர்பு கொள்ளவில்லை என்று சூசை மாணிக்கத்தின் 39 வயது சகோதரர் சார்ல்ஸ் ஜோசெஃப் வலியுறுத்தியுள்ளார்.
உயர் நீதிமன்றத் தீர்ப்பின் உள்ளடக்கிய குறிப்பாணை விவரங்கள், புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்திற்கும், சட்டத்துறைத் தலைவர் அலுவலகத்திற்கும் அனுப்பட்டது. ஆனால், இன்று வரை அவ்விரு தரப்பினரும் தங்கள் குடும்பத்தைத் தொடர்பு கொள்ளவில்லை என்று இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் சார்ல்ஸ் தெரிவித்தார்.
தேவையான அனைத்து நடைமுறைகளைப் பின்பற்றி தாங்கள், தொடர் நடவடிக்கையை எடுத்து வருவதாகவும் எதேச்சையாக எந்தவோர் அறிக்கையும் வெளியிடவில்லை என்றும் தங்களால் இயன்றதைச் செய்து வருவதாகவும் சார்ல்ஸ் குறிப்பிட்டார்.
தனது சகோதரர் சூசை மாணிக்கம் மரணத்திற்கு தங்கள் குடும்பம் நீதியைக் கோருகிறது என்றும், தனது சகோதரர் ஒரு ராணுவ வீரராகி நாட்டிற்குச் சேவை செய்ய விரும்பியதாகவும் சார்ல்ஸ் தெரிவித்தார்.
இதனிடைய சூசை மாணிக்கம் வழக்கில் உயர் நீதிமன்றத்தில் சாட்சியமளித்த தங்களின் நண்பரும் முக்கிய சாட்சியுமான அனாஸ் ஹகிமி மாட் அஹ்மாட் உட்பட மற்ற சாட்சிகளும் போலீஸ் துறையினருக்கு வாக்குமூலங்களை வழங்கத் தயாராக இருப்பதாக சார்ல்ஸ் குறிப்பிட்டார்.








