ஷா ஆலாம், ஆகஸ்ட்.13-
நாட்டின் தேசியக் கொடியான ஜாலூர் கெமிலாங்கைக் கட்டுவதில் நிகழ்ந்த தவற்றுக்கு சட்ட ரீதியாக தீர்வு காண வேண்டுமே தவிர குண்டர் தர்பார் முறையில் அல்ல என்று ஜசெக இளைஞர் பிரிவு வலியுறுத்தியுள்ளது.
தேசியக் கொடி தலைகீழாகக் கட்டப்பட்டு இருக்குமானால், அந்த தவற்றைச் செய்தவர், நாட்டின் நடப்புச் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட வேண்டும் என்ற கொள்கையில் ஜசெக இளைஞர் பிரிவு உறுதியாக இருப்பதாக அதன் தலைவர் வூ கா லியோங் தெரிவித்தார்.
அதை விடுத்து அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் டாக்டர் அக்மால் சாலே போன்ற அரசியல்வாதிகள், தங்களின் தனிப்பட்ட லாபத்திற்காக இது போன்ற பிரச்னைகளை ஊதி, பெருக்கி அரசியலாக்க முற்படுவது சமூகத்திற்குப் பேராபத்தாகும் என்று வூ கா லியோங் நினைவுறுத்தினார்.
நமது நாட்டிற்குத் தாங்களாகவே ஒரு சட்டத்தை உருவாக்கிக் கொள்ளும் தார்மீக போலீஸ்காரர்கள் தேவையில்லை. மாறாக, மலேசியாவிற்கு அமைதி, நல்லிணக்கம் மற்றும் சட்டத்தின் ஒருமைப்பாட்டுக்கு முன்னுரிமை அளிக்கக்கூடிய தலைவர்களே தேவை என்று வூ கா லியோங் வலியுறுத்தினார்.
நாட்டிற்கென்று அடிப்படையில் கட்டமைக்கப்பட்டச் சட்டங்கள் உள்ளன. அந்தச் சட்டங்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமே தவிர சண்டியர்களைப் போல் நடந்து கொள்ளக்கூடாது என்று கா லியோங் இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
பினாங்கு, கெப்பாளா பாதாஸில் வர்த்தகத் தளம் ஒன்றில் ஜாலூர் கெமிலாங் கொடியைத் தலைகீழாகக் கட்டியதற்காக அந்த வர்த்தகத் தளத்தின் முன்புறம் நாளை வியாழக்கிழமை தாம் ஏற்பாடு செய்துள்ள மிகப் பெரிய ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளும்படி பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்து இருக்கும் அம்னோ இளைஞர் பிரிவு தலைவர் டாக்டர் அக்மாலின் நடவடிக்கையை ஜசெக இளைஞர் பிரிவு முழு வீச்சில் கண்டிப்பதாக பாசீர் பெடாமார் சட்டமன்ற உறுப்பினரான வூ கா லியோங் குறிப்பிட்டார்.
அமலாக்கத் தரப்பினரைப் போலச் செயல்பட முற்படும் டாக்டர் அக்மாலின் நடவடிக்கை ஏற்றுக் கொள்ள முடியாது. நாட்டின் சட்டத் திட்டங்களுக்கு மதிப்பளிக்காமல், அந்த அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் தான் தோன்றித் தனமாகச் செயல்படுவது கண்டனத்திற்குரியது என்று பேரா மாநில ஆட்சிக்குழு உறுப்பினரான வூ கா லியோங் தெரிவித்தார்.








