பினாங்கு பாயான் லெபாஸ், தாமான் ஶ்ரீ நிபோங் என்ற இடத்தில் இரண்டு மாடி வீடு ஒன்று இன்று காலையில் தீப்பற்றிக்கொண்டதில் அந்த வீட்டில் தங்கியிருந்த ஒரு குழந்தை உட்பட ஐவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இச்சம்பவத்தில் மூன்று வயது குழந்தை, 30 வயது மதிக்கத்தக்க இரண்டு பெண்கள், இரண்டு சிறார்கள் உயிர் தப்பியதாக பாயான் பாரு, தீயணைப்பு, மீட்புப்படை அதிகாரி முஹமாட் ஃபிர்டவுஸ் முஹமாட் சாட் தெரிவித்தார்.
இத்தீவிபத்து தொடர்பாக தாங்கள் காலை 7.20 மணியளவில் ஓர் அவசர அழைப்பைப் பெற்றதைத் தொடர்ந்து தீயணைப்புப்படையினர் விரைந்து அனுப்பப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். வீட்டின் மேல்மாடி கூரை, படிகட்டின் ஒரு பகுதி தீயில் அழிந்தன. தீ நாலாபுறமும் சூழ்ந்த நிலையில் படிகட்டில் பரவுவதற்கு முன்னதாக அனைவரும் கீழே பாதுகாப்பாக இறங்கிவிட்டதால் அதிர்ஷ்டவசமாக உயர் தப்பிக்க முடிந்ததாக அவர் குறிப்பிட்டார்.








