ஈப்போ, பிப்ரவரி.22-
சட்டம் 672 என்றழைக்கப்படும் திடக்கழிவு மேலாண்மைச் சட்டத்தை ஏற்றுக் கொள்ளாத பேரா, சிலாங்கூர் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில், குப்பை கொட்டுபவர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளை அங்குள்ள ஊராட்சி மன்றங்களே முன்னெடுக்கும் என்று வீடமைப்பு, ஊராட்சி மன்ற அமைச்சர் ங்கா கோர் மிங் தெரிவித்துள்ளார். பொது இடங்களில் குப்பைகளை வீசுபவர்களுக்கு 2,000 ரிங்கிட் வரை அபராதமும், சமூகச் சேவை உத்தரவும் வழங்கப்படுவதால் சுற்றுச்சூழல் தூய்மையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
தண்டனையை விட விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கம் என்றும், இதுவரை நூற்றுக்கணக்கானோர் மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் விளக்கமளித்தார்.








