கோலாலம்பூர், நவம்பர்.01-
கடந்த வாரம் நடைபெற்ற 47-வது ஆசியான் உச்ச நிலை மாநாட்டின் ஆர்டிஎம் நேரலை ஒளிபரப்பின் போது, மூன்று நாடுகளின் தலைவர்களின் பெயர்கள், தவறாக அறிவிக்கப்பட்ட சம்பவத்தை விசாரிக்க, தொடர்புத்துறை அமைச்சகம் விசாரணைக் குழுவை அமைத்துள்ளது.
இச்சம்பவம் மீண்டும் நடக்காமல் தடுக்கும் நோக்கில், ஆர்டிஎம் நிறுவனத்தின் செய்தித்துறை மற்றும் ஒளிபரப்புத் திட்டங்களை மதிப்பாய்வு செய்ய இந்த விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளதாக தொடர்புத்துறை அமைச்சர் டத்தோ ஃபாமி ஃபாட்சீல் தெரிவித்துள்ளார்.
இவ்விசாரணையில், நிர்வாகத்திலோ அல்லது ஒழுங்குமுறைகளிலோ குறைகள் இருந்தால், அதற்கேற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த அக்டோபர் 26-ஆம் தேதி, ஆசியான் உச்சநிலை மாநாட்டின் தொடக்க விழாவின் ஆர்டிஎம் நேரலை ஒளிபரப்பின் போது, சிங்கப்பூர், தாய்லாந்து மற்றும் இந்தோனேசியா நாடுகளைச் சேர்ந்த நடப்புப் பிரதமர்களின் பெயர்களுக்குப் பதிலாக, முந்தைய பிரதமர்களின் பெயர்கள் தவறாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.








