கெடா, குருன் பகுதியில் உள்ள தாமான் மெஸ்ரா பாசா ரெசிடென்சி 1 இல் 500 க்கும் மேற்பட்ட வீடுகள் கடந்த 2019 இல் இருந்தே கட்டி முடிக்கப்படாததால் அவற்றை வாங்கிய உரிமையாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
வீடுகள் இன்னும் கட்டி முடிக்கப்பட்டு கைக்குக் கிடைக்காத நிலையில், அதற்கான மாதாந்திர கட்டணத்தை வீட்டை வாங்கியவர்கள் செலுத்த வேண்ட்யக் கட்டாயத்திற்கு உள்ளாகி உள்ளனர். இதனால், நிதிச் சுமையோடு மன அழுத்தத்திற்கும் அவர்கள் இலக்காகி உள்ளனர்.
இவ்வாண்டு மார்ச் மாதமே வீடுகள் கட்டி முடிக்கப்பட்டிருக்கும் எனக் கொடுத்த வாக்குறுதியைக் கடந்து இன்னும் நிறைவடையாதச் சூழலில் ,தற்போது வசிக்க வேறு ஒரு வீட்டையும் வாடகைக்கு எடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.
தற்போதையப் பொருளாதாரச் சூழலில் ஒவ்வொரு மாதமும் ஆடிரம் வெள்ளி செலுத்தப்படுவது அதிக அழுத்தத்தைக் கொடுத்துள்ளது என வீட்டு உரிமையாளர்கள் தங்கள் அதிருப்தியைப் பதிவு செய்தனர்.
சிலர் வெளி மாநிலங்களில் இருந்து தங்களின் சொந்த மாநிலமான கெடாவில் வீட்டை வாங்கி உள்ளனர். ஆனால், வீடு இன்னும் முழுதாய் கட்டி முடிக்கப்படாத நிலையில், பல சிக்கல்களைச் சந்திப்பதாகவும் குறிப்பிடுகின்றனர்.
இவ்விவகாரம் குறித்து தகவல் அறிந்த குருன் சட்டமன்ற உறுப்பினர் பத்ரோல் பக்தியார், கட்டுமான நிறுவனத்துடன் கலந்தாலோசித்த பிறகு, அடுத்த ஆண்டு 2024 மே மாதம் கட்டுமானம் நிறைவடைந்து விடும் என உறுதி அளித்திருப்பதாகக் குறிப்பிட்டார்.
அந்தக் கால அவகாசமும் மீறப்படால், கட்டுமான நிறுவனத்தின் மீது வீட்டை வாங்கியவர்கள் உரிய நடவடிக்கை எடுக்கத் தயாராக இருப்பதாகவும் பத்ரோல் பக்தியார் கூறினார்.








